கட்டாய ஹெல்மெட் சட்டம் முழுமையாக அமலுக்கு கொண்டு வந்தாலும் மக்கள் இன்றளவும் ஹெல்மெட் போடாமல் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. 

மேலும், இது குறித்த பொது நல வழக்கு ஒன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த தருணத்தில், ஏன் கட்டாய ஹெல்மெட் சட்டம் முழுமையாக அமலுக்கு கொண்டுவர முடியவில்லை என நீதிபதிகள் போக்குவரத்து துறை போலீசாருக்கு கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை, "ஹெல்மெட் அணியாமல் வந்தால் அவர்களுக்கு அபராதம் ரூ.100  மட்டுமே என்பதால் மிக எளிதாக கட்டணத்தை செலுத்திவிட்டு செல்கின்றனர். மேலும் தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கையும் எடுத்து வருகிறோம் என தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், சென்னை முழுக்க பல முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை விதிமுறைகளை மீறுபவர்கள், சிக்னலை மதிக்காமல் செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் ஏமாந்து செல்வது, லைசன்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்குவது இப்படி எதுவாக இருந்தாலும்..போலீசார் விடுவதாக இல்லை.

இதில் குறிப்பாக சொல்லவேண்டிய விஷயம் என்ன வென்றால், முன்பெல்லாம் பெண்கள் என சின்ன ஒரு  பாகுபாடு பார்த்து சரி போங்க. இனி ஹெல்மெட் அணியுங்கள் என அறிவுரை சொல்லி அனுப்புவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை... இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை யார் ஹெல்மெட் அணியாமல் வந்தாலும் நிற்க வைத்து, முழு வாகன சோதனை நடத்தி, அபராதம் விதிக்கின்றனர்

அதுமட்டுமா, சிக்னலை மதிக்காமல் சென்றால், வண்டி எண்ணை ஆதாரமாக கொண்டு, விலாசத்தை கண்டுபிடித்து வீட்டிற்கே அபராத கட்டண ரசீதை அனுப்பி வருகிறது போக்குவரத்து காவல் துறை.

எனவே மக்களே, கட்டாயம் ஹெல்மெட் என்பது  நம்மை கட்டாயப்படுத்துவது என நினைக்காமல், நம் உயிரை காக்கும் கவசம் என்பதை புரிந்துகொண்டு அனைவரும் ஹெல்மெட் அணிந்து மெதுவாக செல்லுங்கள். நாம் யாரை நம்பி இருக்கிறோம் என்பதை விட.. யாரெல்லாம் நம்மை நம்பி இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு நம்முடைய சந்ததியினருக்கு நாம் தான் முன்னோடியாக இருக்க வேண்டும்.