லஞ்சம் கேட்டால் "14400"- க்கு உடனே கால் பண்ணுங்க..! முதல்வர் அதிரடி...! 

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக மக்கள் நலனிலும் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதேபோன்று முதல்வர் ஆவதற்கு முன்பாக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை முதல்வர் பதவியை ஏற்ற பிறகு ஒவ்வொன்றாக தவறாமல் செய்து காட்டி பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அமோக வரவேற்பு கிடைக்கிறது

இந்த நிலையில் குடிமக்கள் உதவி மையம் என்ற ஒரு புதிய திட்டத்தை துவக்கி அதற்காக ஒரு ஹெல்ப்லைன் எண்ணையும் அறிவித்துள்ளார். அதன் படி,14400 என்ற எண்ணிற்கு அனைத்து புகார்களை தெரிவிக்கலாம். அரசு அதிகாரிகள் ஊழல் செய்தாலும், லஞ்சம் கேட்டாலும் 14400 இந்த எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த எண்ணில் புகார் தெரிவிக்கும் அனைவருக்கும் ஒரு மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.  இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊழலை காணும்போதெல்லாம் "குரலை உயர்த்துங்கள்... ஊழலை ஒழிக்கவும், ஆந்திராவை வளமாக்கவும் உதவி செய்யுங்கள்" என்ற வாசகம்  அடங்கிய சுவரொட்டியை பார்க்கமுடிகிறது.

இவருடைய இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆந்திர மக்கள் மத்தியில் மட்டுமின்றி அண்டை மாநில மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவரின் செயல்பாடுகள் அனைத்தும் மக்களை வெகுவாக ஈர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது,.