40 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் அத்திவரதர் வைபவம் காஞ்சிபுரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

எப்போதுமே வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தையும் கடந்து செல்கிறது. இதற்கிடையில் அரசியல்வாதிகள், அறநிலையத் துறை ஊழியர்கள், கோயில் பணியாளர்கள் என பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களை எளிதாக உள்ளே விடுவதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் வெளியூரில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வருகை புரியும் நபர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு  முறைகேடாக சில இடைத்தரகர்கள் ஈடுபட்டு வருவதால் முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதையிலும் நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி உள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியிலும் அதிக கூட்ட நெரிசல் இருப்பதை கண்டுபிடித்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் தான் தெரிய வந்தது பல்வேறு இடைத்தரகர்கள் இதில் வேலை செய்து உள்ளனர் என்பதை..  எனவே இதனை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து அங்கிருந்து கிளம்பி உள்ளார் ஆணையர்.