Childrens are only talking what they are hearing
அறிவழகன், மன நல மருத்துவர்
பெற்றோர் ஒரு பக்கமும், பிள்ளை வேறு பக்கமும், எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் போல நின்றிருந்தனர். எதேச்சையாக பெற்றோர் பக்கம் திரும்பிய நேரத்தில் கூட, அப்படி ஒரு வெறுப்பும், கோபமும் பையனின் முகத்தில் தெரிந்தது. பெற்றோரை தனியாக அழைத்து முதலில் பேசினேன்.
'இந்த வருஷம், பிளஸ் 2 வகுப்பு போயிருக்கான். சரியாய் படிப்பதே இல்லை. நிறைய நண்பர்கள் அவங்களோட வெளியில சுத்துறான். படிடான்னு சொன்னா, கெட்ட வார்த்தையில திட்டுறான்.
அவன் வீட்டுக்குள்ளேயே சொல்ற கெட்ட வார்த்தை எல்லாம் காது கொடுத்து கேட்க முடியாது' என்றார் வினோத்தின் அப்பா. கொஞ்ச நேரம் பெற்றோரை காத்திருக்கச் சொல்லிவிட்டு, பையனை தனியாக அழைத்தேன். 'என்னப்பா, அம்மா, அப்பா உன் நல்லதுக்குத் தானே சொல்றாங்க.
ஏன் இப்படி நடந்துக்கிறே?' என்றவுடன். 'எது நல்லது? என் பிரெண்ட்ஸ முன்னாடியே, என்னை திட்டுறதா? மத்தவங்க முன்னாடி, என் நடத்தையை அசிங்கமா பேசுறாங்க. நான் ஒண்ணும் மோசமா படிச்கிறவன் இல்லை. 10, பிளஸ் 1ல நல்லாத்தான் மார்க் வாங்கியிருக்கேன்' என்றான். அப்பா பேசுறதை கேட்டுத்தான் நானும் பேசக்கற்றுக் கொண்டேன் என்கிறான்.
'வெளியில் போய்விட்டு வந்தால், அவன் மேலே சிகரெட் வாசனை வருது' என்று, அவன் பெற்றோர் கூறினர். அவனை நேரில் பார்த்தபோது, அப்படி எதுவும் தெரியவில்லை. இருந்தாலும் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம் என்று தோன்றியது.
ரத்தப் பரிசோதனை செய்தேன். சிகரெட் பழக்கத்திற்கு அடிமை ஆகவில்லை என்றாலும், அவ்வப்போது நண்பர்களோடு சேர்ந்து, சில முயற்சிகளை செய்து பார்த்திருக்கிறான்.
தற்போதைய சவால் 'டீன் ஏஜ்'ஜில் இருக்கும் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இருக்கும் பிரச்னை தான், தற்போது மிகப் பெரிய சவாலாக உள்ளது. காரணம், முற்றிலும் இருவேறு தலைமுறையினர் இவர்கள்.
பிள்ளைகள் நன்றாக வளர வேண்டும் என்ற அக்கறை இருந்தாலும், அதை எப்படி செயல்படுத்துவது என்று பெற்றோருக்குத் தெரிவதில்லை.
பையன் சிறிய குழந்தை இல்லை; வளர்ந்த பையன். ஆனாலும், அவன் உடல் வளர்ந்த அளவு மனது இந்த வயதில் வளர்ந்திருக்காது.
பெற்றோரும், பிள்ளைகளும் எப்படி தொடர்பு கொள்கின்றனர் என்பது முக்கியம். எல்லா விஷயங்களிலும் குறிப்பாக குளிப்பது, சாப்பிடுவது, நீங்க சொல்றபடி தான் கேட்கணும் என்று எதிர்பார்ப்பது தவறு. இந்த வயதில் நண்பர்கள் தான் முக்கியம் என்று தோன்றும்.
நண்பர்கள் எப்படி என்று தெரிந்து, பையனை வழி நடத்த வேண்டும். பிளஸ் 2வில் மட்டும், அவன் புத்தகமும் கையுமாக இருந்தால் போதும் என்று நினைத்து, இதுவரை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்துவிட்டு, சட்டென்று கட்டுப்பாடுகளை விதிப்பது, அவனுக்கு கோபத்தை வரவழைக்கும்.
எல்லாவற்றையும் விட முக்கியம், இந்த வயதில், மற்றவர்கள் முன் அவனை எதுவும் பேச வேண்டாம். குறிப்பாக, கோபமாக இருக்கும் நேரத்தில் பேசவே வேண்டாம். என கூறினேன். அமைதியாக இருக்கும் சமயத்தில் புரியும் படி எடுத்து சொல்லச் சொன்னேன். இப்போது கவுன்சிலிங் வருகிறான் மாற்றங்கள் தெரிகிறது என அவனது பெற்றோர் கூறினர்.
