சென்னையை சேர்ந்த பெண் செய்து கொண்ட ஜீரோ வேஸ்ட் திருமணம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
Chennai Woman Zero Waste Marriage : திருமணம் என்றாலே கொண்டாட்டம் தான். இன்னிசை தொடங்கி உணவு வரை கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளிக்கும் ஏராளமான விஷயங்கள் திருமணத்தில் இடம்பெறும். ஆனால் திருமணம் முடிந்தபின்னர் அந்த இடமே குப்பைகளால் நிரம்பிவிரும். எப்படி திருவிழா முடிந்த பின்னர் மைதானம் குப்பைகளால் காட்சியளிக்குமோ அப்படிதான் திருமண மண்டபமும். இதை தவிர்க்கும் வகையில்தான் சென்னை பெண் தன் திருமணத்தை ஜீரோ வேஸ்ட் திருமணமாக செய்துள்ளார். சென்னையை சேர்ந்தவர் உமா ராம், இப்படியும் திருமணத்தை செய்யலமா? என வியக்கும் அளவில் ஜீரோ வேஸ்ட் திருமணம் செய்து அசத்தியுள்ளார். சிந்தனைமிக்க திருமணத் தேர்வுகள், கொண்டாட்டங்கள் எவ்வாறு மகிழ்ச்சியாகவும் நிலையானதாகவும் இருக்கும் என்பதைக் காட்டுகின்றன.
என்ன ஸ்பெஷல்?
திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட பூக்கழிவுகள், மக்கும் கழிவுகள் உரமாக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ்களை கூட தனித்துவமாக வடிமைத்துள்ளார். பொதுவாக காகித திருமண அழைப்பிதழ்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் விதைக் காகித அழைப்பிதழ்களை குறித்து தெரியுமா? இந்தக் கல்யாணத்தில் அது கூடுதல் சிறப்பு. அழைப்பிழகளில் கொடுக்கப்பட்ட விதைகளை வீட்டில் முளைக்க வைக்கலாம்.
ஜீரோ வேஸ்ட் கல்யாணம்:
உமாவின் ஆசை ஜீரோ வேஸ்ட் கல்யாணமாக இருந்தாலும் அதை மற்றவர்களுக்கு புரிய வைப்பது எளிதாக இல்லை. மேடை அலங்காரம், உணவு என அனைத்திலும் கழிவுகளை குறைப்பது எளிய விஷயம் அல்ல. பொதுவாக திருமண விழாக்களில் உணவு அதிகமாக வீணாகும். இதை குறைக்க உமா 'கனெக்ட் டு பூமி' உடன் கைகோர்த்தார். அவர்களுடைய உதவியுடன் உணவு, பூ அலங்காரம் ஆகியவற்றில் சேர்ந்த கழிவுகளைப் பிரித்து கால்நடைகளுக்கு உணவாக அளித்தனர்.
பிளாஸ்டிக் பாட்டில்!
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இந்த திருமண நிகழ்வில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் கூட பயனுள்ளதாக பயன்படுத்தப்பட்டது. மீதமான பாட்டில் தண்ணீர் தாவரங்களுக்கு ஊற்றப்பட்டது. விருந்தினர்களால் பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள் மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பப்பட்டன.
உரமும் விதையும்!
திருமண விழாவுக்கு பயன்படுத்திய பூக்கள், பழத் தோல்கள், மக்கும் கழிவுகள் போன்றவை உரமாக மாற்றப்பட்டன. முற்றிலும் கழிவுகள் இல்லாத திருமணத்தை செய்வது சாத்தியமில்லாமல் இருந்தாலும் சிறுசிறு மாற்றம் மூலம் கழிவுகளை கணிசமாக குறைக்க முடியும் என உமா நம்பியுள்ளார். அவருடைய திருமண அழைப்பிதழ் வெறும் காகிதம் இல்லாமல் விதைகளையும் கொண்டிருந்தது. இதை திருமணத்திற்கு பின் வீட்டில் விதைத்தால் அவை வளரும்போது தம்பதியரை நினைத்து பார்க்க சிறந்த வழியாக இருக்கும்.
கழிவுகளை மறுபயன்பாடு செய்வது, இயற்கையான பொருள்களை பயன்படுத்துவது என திட்டமிட்டு செயல்பட்டதால் கிட்டதட்ட 110 கிலோ கழிவுகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டது. பூமியின் மீதான அன்பும் அக்கறையும் உமாவின் இந்த செயலால் தெரிய வருகிறது.
