சென்னை மாநகரின் புதிய சாதனை...இரண்டு நாட்களில் சேர்ந்த 22.58 டன் குப்பை...

தீபாவளி பண்டிகை கொண்டாடத்தின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சென்னையில் மட்டும் 22.58 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெரும்பாலான மக்கள் அதிரடியாக கொண்டாடும் தீபாவளி பண்டிகை, இந்த ஆண்டும் தடபுடலாக களைகட்டியது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. என்னதான் காலை 6 மணி முதல்  7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அதிரடி காட்டினாலும், பண்டிகை கொண்டாட்டத்தில் அதை யாரும் காதில் வாங்கியதாக தெரியவில்லை.

ஆனால் சென்னையில் வழக்கம் போல எல்லா நேரத்திலும் டமல், டூமில் என பட்டாசு சத்தம் கேட்டுக்கொண்டே தான் இருந்தது. அதன் பலனாக சென்னை முழுவதும் எங்கு நோக்கிலும் பட்டாசு கழிவுகளாக காணப்பட்டன. பட்டாசு குப்பைகள் மிகவும் ஆபத்தானவை என்பதால், அதனை மற்ற குப்பைகளுடன் சேர்த்து மறுசுழற்சி செய்ய இயலாது. அதற்கு பதிலாக பட்டாசு கழிவுகளை மட்டும் தனியாக பிரித்தே மறுசுழற்சி செய்ய முடியும். எனவே பட்டாசு கழிவுகளை மட்டும் தனியாக சேகரிப்பதற்காக துப்புரவு பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி கோணிப்பைகளை வழங்கியது. கடந்த 2 நாட்களில் மாத்திரம் லட்சக்கணக்கானோர் ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்கிய பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.

இதனால் சென்னையில் மட்டும் சுமார் 22.58 டன் அளவிற்கு பட்டாசு குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட பட்டாசு குப்பைகளில் உள்ள வெடி மருந்துகளை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு 65 டன் பட்டாசு குப்பைகள் சேகரிப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 22.58 டன் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளது என்பதே சற்று ஆறுதல் அடையச் செய்யும் செய்தி.