கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.43 லட்சமாக  பதிவாகியுள்ளது. இந்நிலையில், திடீரென மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் வேகமெடுத்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இந்த 6 மாநில அரசைகளையும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில்: கடந்த 4 வார கணக்கெடுப்பில் மகாராஷ்டிரா, கேரளாவில் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பஞ்சாப், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மத்திய பிரதேசத்தில் தினசரி பாதிப்பு கூடிக் கொண்டே உள்ளது. எனவே, இம்மாநிலங்கள் தினசரி ஆர்டி- பிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடுகளை மாநிலங்கள் கண்டிப்பாக அமல் படுத்த வேண்டும் .கண்காணிப்பு பணிகளில் மாநில நிர்வாகங்கள் தீவிரமாக இருக்க வேண்டும் அதில் கூறப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் இன்று இரவு 8 மணி முதல் ஒருவாரத்திற்கு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்கத் தவறினால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். அடுத்த சில நாட்களுக்கு அரசியல் போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் மத, சமூக, அரசியல் கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.