கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை..! 

வடபழனி முருகன் கோவில் வளாகத்திற்குள் இனி செல்போனை பயன்படுத்த கூடாது என புதிய திட்டத்தை கொண்டுவர உள்ளது இந்து சமய அறநிலையத்துறை. 

பொதுவாகவே சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு வாரந்தோறும் குறிப்பாக திங்கள் புதன் வியாழக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிக பக்தர்கள் வருவார்கள்.

அப்போது கோவிலுக்குள் நின்று செல்போனில் பேசியவாறு நடந்து செல்வதும், செல்பி புகைப்படங்கள் எடுப்பதும், சன்னதி அருகிலேயே செல்போனில் சத்தமாக பேசிக் கொண்டிருப்பதுமான காட்சிகளை பார்க்க முடிகிறது. இது மற்றவர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் பலரும் குற்றசாட்டை முன்வைத்தனர். 

இது தொடர்பாக பொதுமக்களின் கருத்தை கேட்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவிலில் அமைதியை கடைப்பிடித்து பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் செய்ய வேண்டுமென்றால், செல்போனை வாங்கி வைக்க ஒரு மையம் அங்கு புதிதாக வைக்க வேண்டும். அந்த இடம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மிக எளிதாக இருக்க வேண்டும். எனவே இதனை அமல்படுத்த அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு முன்னதாக சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல். இதற்கிடையில் சென்னை வடபழனி முருகன் கோவிலிலும் செல்போனை பயன்படுத்த தடைவிதிக்க ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது இந்து அறநிலையத்துறை என்பது குறிப்பிடத்தக்கது.