68 பதக்கங்களை வென்ற கேரம் வீராங்கனை லாரி மோதி பலி..! 

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த டோம்பிவிலி பல்லவா என்ற பகுதியில் வசித்து வரும் மாணவி ஜானவி மோரே. இவருக்கு வயது ௧௮. இவர் கேரம் போட்டியில் பங்கேற்று மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு இதுவரை 68 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றவர். அதில் 36 பதக்கங்கள் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தொடர்ந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் மாணவி ஜானவி. இந்நிலையில் நேற்று மாலை தன் வீட்டிலிருந்து எதிர்ப்புறமாக உள்ள சாலையை நோக்கி கடந்த சென்றபோது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதி உள்ளது.

இதில் பலத்த காயங்களுடன் சரிந்து விழுந்த ஜானவி ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஜானவியை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில் இந்த விபத்து ஏற்பட அங்கு பணியாற்றிய போக்குவரத்து காவல்துறை அதிகாரி சரிவர சிக்னலை மாற்றி அமைக்காததே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த அதிர்ச்சி சம்பவத்தை கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஜானவியின் பெற்றோர் மீளமுடியாத துயரத்தில் ஆழ்ந்து உள்ளனர். 

முன்னதாக நீச்சல் வீரரான பாலகிருஷ்ணன் சென்னையில் நேற்று இரவு லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் அடுத்தபடியாக கேரம் வீராங்கனை ஜானவி மோரே உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.