அனைத்துவித கேன்சர் நோயிலிருந்தும் பாதுகாக்கும் ராகி நெல்லி கஞ்சியை எப்படி செய்வது அதன் பிற நன்மைகளை இங்கு காணலாம்.

புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த மருந்து கண்டுபிடிப்பதற்கு பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுக்க அதிகம் செலவு செய்யப்படும் நோய்களில் இதுவும் ஒன்று. இந்த நோய் வரும் முன் தடுக்க சில வழிகள் உள்ளன. ஆரோக்கியமான உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை இருந்தால் இந்த நோயை ஓரளவு வரும் முன் தடுக்கலாம். சில கெட்ட உணவுப் பழக்கங்களை கைவிடுவது போலவே, ராகி நெல்லிக்காய் கஞ்சி போன்ற நல்ல உணவை எடுத்துக் கொள்வதும் புற்றுநோயிலிருந்து நம்மை காக்கும்.

ராகி மகிமை!

​கேழ்வரகு என சொல்லப்படும் ராகி மாவில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எலும்புகளுக்கு தேவையான கால்சியம், இரத்தசோகை வராமல் தடுக்கும் இரும்புச்சத்து ஆகியவை ராகியில் உள்ளன. இதில் நார்ச்சத்துக்கள் கபத்தைக் குறைக்கக் கூடியவை. செரிமானத்திற்கு நல்லது. நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். ராகியில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. இதனால் செல் சேதம் தடுக்கப்படுகிறது. இப்படிதான் புற்றுநோய் செல்களின் தாக்கம் குறைகிறது.

அற்புத நெல்லிக்காய்

வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடண்ட்களின் பொக்கிஷம். வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமநிலையில் வைக்க உதவும். குறிப்பாக பித்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும். கொலாஜன் உற்பத்தியாக ஆதரவாக இருக்கும். நெல்லிக்காயில் காணப்படும் பினாலிக் தான் புற்றுநோயை எதிர்த்து போராடும் திறன்கொண்டது. கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

பசும்பால்

பசு என்றால் உயிர் என்று பொருள். தாய்ப்பாலுக்கு அடுத்து உடலின் உயிர்ச்சக்தியை மேம்படுத்த உதவுவது பசும்பால்தான். இதில் உள்ள கால்சியம், புரதங்கள் இரண்டும் எலும்புகள், தசைகளை வலுப்பெற செய்கிறது. நாட்டுப் பசும்பாலில் உள்ள லினோலிக் என்ற அமிலம் புற்றுநோய்க்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மூன்றும் கஞ்சியில் சேர்க்கப்படும் பிரதான பொருள்கள். இதுதவிர இந்த கஞ்சியில் சேர்க்கும் மற்ற பொருள்களும் பல சத்துக்களை கொண்டவை. இப்போது அந்த புற்றுநோயை தடுக்கும் ராகி நெல்லி கஞ்சி ரெசிபியை காணலாம்.

தேவையான பொருள்கள்

1) ராகி மாவு - 2 தேக்கரண்டி 

2) நெல்லிக்காய் பொடி - 1 தேக்கரண்டி 

3) ஒரு கப் பசும்பால் 

4) நறுக்கிய பாதாம் அல்லது வால்நட் 

5) மாதுளை விதைகள் - தேவைக்கேற்ப 

6) நறுக்கிய 3 பேரிச்சை பழங்கள் 

7) சியா விதை - 1 கரண்டி (ஊறவைத்தது) 

8) மஞ்சள் பொடி - தேவையான அளவு 

9) லவங்கப்பட்டை பொடி -1/4 ஸ்பூன் 

10) மிளகுப் பொடி - 1/4 ஸ்பூன் 

11) நாட்டுச்சர்க்கரை - 1 ஸ்பூன்

ராகி நெல்லி கஞ்சி செய்முறை

ஒரு அடி கனமான பாத்திரத்தில் 2 ஸ்பூன் ராகி மாவை போட்டு வாசனை வருமளவுக்கு வறுக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு கப் பசும்பாலை ஊற்றி கொதிக்கவைக்க வேண்டும். பசும்பால் கொதித்த பின் இறக்கிவையுங்கள். வறுத்த ராகி மாவுடன் காய்ச்சிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறுங்கள். மாவு கட்டிப் பிடிக்கக் கூடாது. தொடர்ந்து கலக்கி கொண்டே இருங்கள். மிகக் குறைந்த தீயில் தான் இப்படி கிளற வேண்டும்.

கஞ்சி பதத்திற்கு வரும்போது நெல்லிக்காய் தூள், மஞ்சள் பொடி, இலவங்கப்பட்டை பொடி, மிளகுத் தூள் போன்றவற்றை போட வேண்டும். பின் 2 முதல் 3 நிமிடங்கள் அந்த கலவையை வேகவிட வேண்டும். உங்களுக்கு தேவைப்பட்டால் கூடுதல் பால் சேர்க்கலாம். பின்னர் பேரிச்சம் பழம், நாட்டுச் சர்க்கரை போட்டு கிளறி விடுங்கள். அனைத்து பொருள்களும் நன்கு கலந்த பின் அடுப்பை அணைக்கலாம். சுவையான ராகி நெல்லி கஞ்சி தயாராகிவிடும்.

இதை பெரிய கிண்ணத்தில் ஊற்றி அதன் மீது மாதுளை விதைகள், ஊறவைத்த சியா விதை, நறுக்கிய பாதாம் அல்லது வால்நட் போட்டுக் குடித்தால் அமிர்தமாக இருக்கும். வாரத்திற்கு 3 நாட்கள் குடிக்கலாம். நாளடைவில் நல்ல மாற்றங்களை உணர்வீர்கள்.