சூடாக நீர் அல்லது பானங்களை அடிக்கடி குடித்து வந்தாலும், காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வந்தாலும் உடல் எடை குறையும் என்ற கருத்து பல காலமாக நிலவி வருகிறது. இது உண்மை தானா? உண்மையில் வெந்நீர் குடித்தால் உடல் எடை குறையுமா?
உடல் எடை குறைப்பதற்கான வேலைகளை செய்வதே தற்போதைய கால கட்டத்தில் பலருக்கும் தினசரி டாஸ்க் ஆக மாறி உள்ளது. இதற்காக டயட், லைஃப்ஸ்டைல் என பலவற்றையும் மாற்றி மாற்றி முயற்சி செய்து பார்க்கிறோம். எவற்றை எல்லாம் செய்தால் உடல் எடை குறையும். அதுவும் வேகமாக, ஈஸியாக உடல் எடையை குறைக்க என்ன வழி என கூகுள் செய்து பார்க்காதவர்கள் மிக மிக குறைவு என்றே சொல்லலாம். உடல் எடையை குறைப்பதற்காக பலரும் கடைபிடிக்கும் ஒரு முறை வெதுவெதுபாபன தண்ணீர் குடிப்பது. இதோடு புதினா, சீரகம், கிராம்பு உள்ளிட்ட பலவற்றையும் சேர்த்து தினமும் குடிப்பதும் பலரின் பழக்கமாக உள்ளது. உண்மையிலேயே இப்படி சூடாக குடிக்கும் தண்ணீரால் உடல் எடை குறையுமா? குறையாதா? பலரும் பல காலமாக பின்பற்றி வரும் இந்த டெக்னிக் பயன் தருமா? வாங்க தெரிந்து கொள்ளலாம்.
வெந்நீர் குடித்தால் எடை குறையுமா?

வெந்நீர் குடிப்பதால் உடல் எடை குறையுமா என்ற கேள்விக்கு மருத்துவ நிபுணர்கள் பலரும் தரும் ஒரே பதில் இல்லை என்பது தான். வெதுவெதுப்பான நீர் அல்லது பானங்கள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்க அல்லது கரைக்க உதவும் என்பது உண்மை கிடையாது. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் வெது வெதுப்பான நீரை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது. இதனால் செரிமான உறுப்புகள் சீராக இயங்க உதவும். வெது வெதுப்பான தண்ணீர் உங்களின் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுமே தவிர, உடல் எடையை குறைக்காது.
உடல் எடையை குறைக்க என்ன வழி?
அப்படின்னா எது தான் உடல் எடையை குறைக்க உதவும் என்றால். கலோரிகள் குறைபாடு ஒன்று மட்டும் தான் இதற்கு ஒரே வழி என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதாவது, நீங்கள் சாப்பிடும் உணவை விட அதிக கலோரிகள் தினமும் எரிக்கப்பட வேண்டும். இது மட்டும் தான் உடல் எடையை குறைக்கவும், நாள் முழுவதும் நீங்கள் ஆற்றலுடன் செயல்படவும் உதவும். நீங்கள் சுறுசுறுப்பாக இயங்க தினமும் குறிப்பிட்ட அளவு கலோரிகள் மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் உங்களின் வயது, பாலினம், எடை ஆகியவற்றை பொறுத்து இந்த கலோரிகளின் அளவு என்பது மாறுபடும். தொடர்ச்சியாக கலோரிகள் உடலில் குறைவாக இருப்பது உங்களின் எடையை சரியான முறையில் குறைக்க உதவும்.
கலோரிகள் அளவை குறைக்க வழிகள் :
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், வழக்கமாக சாப்பிடும் அளவை விட குறைவான அளவு உணவை எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். உங்களின் உடல் எடையின் அளவிற்கு ஏற்ப உங்களின் உணவின் அளவு இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளை மட்டுமே சாப்பிடுவது என்பதில் உறுதியாக இருங்கள். உணவை தவிர்ப்பதை விட உணவின் அளவை சரியான முறைக்கு மாற்றுவது உடல் எடையை குறைக்க மிக சிறந்த வழியாகும்.
பழங்கள், காய்கறிகள் :

நெகடிவ் கலோரிகள் எனப்படும் பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இது கலோரிகளை குறைவாக வழங்குவதுடன், செரிமான ஆற்றலை அதிகப்படுத்தி, உடலுக்கு வழங்கும் ஆற்றலையும் அதிகப்படுத்தும். கேரட், தக்காளி, வெள்ளரி, தர்பூசணி போன்ற பல பழங்கள், காய்கறிகள் உடலுக்கு மிகவும் நல்லது. இவைகள் உடலில் குறைந்த கலோரிகளை மட்டுமே தரக்கூடியவை.
போதுமான தண்ணீர் குடிக்கவும்:
உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டும் என்றால் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியம். இத உங்கள் வளர்சிதை மாற்றத்தை விரைப்படுத்தும். பசியை கட்டுப்படுத்தும். நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதுடன், உணவுக்கு முன் ஒரு கிளாஸ் முழுவதுமாக தண்ணீர் குடிப்பது அவசியம்.
சரியான இடைவெளியில் உணவு :
உடலில் அதிக கலோரிகளை எரிக்க, இடைவிடாமல் பல மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கம் முறையை சிலர் பின்பற்றுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. சரியான டாக்டரின் வழிகாட்டுதலுடன் குறிப்பிட்ட உணவு அட்டவணையை, சாப்பிடும் நேரத்தை பின்பற்றி வேண்டும். உணவிற்கு இடைப்பட்ட நேரத்தில் நொறுக்கு தீனி உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
