அதிகமாக தண்ணீர் குடிப்பதால் கிட்னியில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என இங்கு காணலாம்.
உடலில் ஆரோக்கியத்துக்கு நாம் தண்ணீர் அருந்துவதும் முக்கிய காரணமாகும். போதுமான அளவு தண்ணீர் குடித்தால் நல்லது. ஆனால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது பிரச்சனையாக உருவெடுக்கலாம். அதிகமான நீரிழிப்பு ஆரோக்கியத்திற்கு பிரச்சனை. அதைக் கவனிக்காமல் விடுவது உடலுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக அமையும். நமது உடலில் சிறுநீரகங்கள் தான் வடிகட்டும் அமைப்பாக செயல்படுகிறது. அதிகப்படியான நீர் இரத்த ஓட்டத்தில் கலக்கும் போது சிறுநீரகங்கள் தான் நேரடியாகப் பாதிக்கப்படுகிறது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் சிறுநீரங்களால் வடிகட்ட முடியாதா? அப்படியென்றால், உண்மையில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அதிகமாக தண்ணீர் குடிப்பது ஏன் ஆபத்தில் முடிகிறது. வாங்க பார்க்கலாம்.
சிறுநீரகங்களின் வேலையே வெறும் வடிகட்டுதல் அல்ல, சமநிலைப்படுத்துதலும் தான். இவை கட்டுப்பாட்டாளர்கள் போல செயல்படுகின்றன. நம் உடலில் உள்ள தண்ணீர், உப்புகள், தாதுக்களை சமநிலையாக வைக்க உதவுகின்றன. நீங்கள் அதிகமாக தண்ணீர் குடித்தால் இரத்தத்தில் சோடியம் நீர்த்துப் போய்விடும். இதனை ஹைபோநெட்ரீமியா என்கிறார்கள். சோடியம் அளவு ரொம்ப குறைந்தால் சிறுநீரகங்கள் அதிக நேரம் இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் உடலின் திரவநிலை சமநிலையை இழக்கும். இது உடனடியாக ஏற்படாது. இருப்பினும் கிட்னி செயல்பாட்டில் நீண்டகால அழுத்தத்தை உண்டாக்கும்.
எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்கு பொதுவான பதில் ஏதுமில்லை. ஏனென்றால் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஒற்றை விதியை எல்லோரும் பின்பற்ற முடியாது. காலநிலை, வயது, ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகியவற்றை பொறுத்து ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்ற தேவைகள் மாறுபடும்.
சராசரியாக சொல்ல வேண்டுமென்றால் வயது வந்த ஆரோக்கியமான நபர் ஒருவரின் சிறுநீரகங்கள் ஒரு மணி நேரத்தில் 0.8 முதல் 1 லிட்டர் தண்ணீரை வடிகட்ட முடியும். இந்த அவை தாண்டினால் பிரச்சனையான். பெரியவர்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு நாளில் 2.5 முதல் 3.5 லிட்டர் திரவங்கள் போதுமானது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இவை வெறும் தண்ணீராக இல்லாமல் தண்ணீர், பழங்கள், உணவு ஆகியவற்றில் இருந்தும் கிடைக்கமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதிகப்படியான நீரேற்றம் உங்களை அடிக்கடி கழிவறைக்கு அழைத்து செல்வதோடு நிற்காது. மூளை வீக்கம், குமட்டல், குழப்பம், வலிப்பு தாக்கங்கள் போன்ற பிரச்சனைகளை கூட ஏற்படுத்தக் கூடும். விளையாட்டு வீரர்கள், தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடுவோர் தங்களுடைய தீவிர உடற்பயிற்சி சமயங்களில் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்தாமல் வெறும் திரவங்களை மாற்றினால் சில நேரங்களில் நீர் போதையை ஏற்படுத்திவிடுவார்கள். முன்னரே சிறுநீரகம் அல்லது இதய பிரச்சினை இருப்பவர்களுக்கு அதிகப்படியான நீர்ச்சத்து வீக்கம், இரத்த அழுத்த சமநிலையின்மை உள்ள பல பிரச்சனைகள் வரலாம்.
நீரேற்றம் என்பது வெறும் தண்ணீர் அல்ல. அதனால் லிட்டர் கணக்கில் வெறும் நீரை குடிப்பதால் கிட்னி பலனடையாது. நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரிக்காய், ஆரஞ்சு, முலாம்பழம், நீர்ச்சத்துள்ள காய்கறிகள் ஆகியவை உண்ணலாம். இதனால் தாதுக்களுடன் திரவங்களும் உடலில் சேர்கின்றன.
வெறும் தண்ணீரை ஒரே நேரத்தில் ரொம்ப குடிப்பதை விட மூலிகை டீ, தேங்காய் தண்ணீர், மோர் போன்றவையும் அருந்தலாம். இவை எலக்ட்ரோலைட்டுகளை அளிக்கும். நாள் முழுவதும் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிக்கலாம். சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பராமரிக்க நினைப்பவர்கள் ஒரே நேரத்தில் தண்ணீரை குடிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பது வடிகட்டுதல் நிகழ்வுக்கு எளிமையாக இருக்கும். சிறுநீரகங்களும் ஆரோக்கியமாக காணப்படும்.
