விழுந்தது அடுத்த பேனர்..! ஊழியர் படுகாயம்..! வேலூரில் பரபரப்பு..! 

சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ என்ற பெண் பலியான சம்பவம் இந்திய அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு மற்றும் பொதுமக்களின் கருத்து... ஆளும் கட்சி எதிர்க்கட்சி என தொடர்ந்து அறிக்கை வெளியிடுவது... என தமிழகத்தில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறி உள்ளது சுபஸ்ரீயின்  உயிரிழப்பு. இதனை தொடர்ந்து பேனர் அடித்து கொடுத்த கடைக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு நடந்து வருவதால் நீதிபதிகள் பல்வேறு  கேள்விகளை அரசுக்கு எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்த ஒரு பரபரப்பான சூழ்நிலையில், வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து டாஸ்மாக் ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை கூட்டியுள்ளது.

வேலூர் மாவட்டம் நெமிலியை சேர்ந்தவர் டாஸ்மாக் ஊழியர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் காவேரிபாக்கத்திற்கு வந்துள்ளார். அப்போது காவேரிபாக்கம் பேருந்து நிலையம் எதிர்புறமாக உள்ள சாலையை கடக்க முயன்ற போது அங்கு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் ஒன்று காற்றில் சரிந்து அவர் தலையில் விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை கிளப்பி  உள்ளது