அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கான அவகாசம் வரும் 16ஆம் தேதி இரவு உடன் நிறைவு பெறுகிறது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அதிரடியாக பேட்டி கொடுத்துள்ளார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிக சிறப்பு வாய்ந்த நிகழ்வான அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறும். அந்த வகையில் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சயன கோலத்தில் காட்சி அளித்து இருந்தார் அத்திவரதர். பின்னர் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சிலையின் உறுதி தன்மையை பொருத்து நின்ற கோலத்தில் அத்தி வரதரை தரிசனத்திற்காக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நின்ற கோலத்தில் அத்தி வரதரை காண்பதற்காக பக்தர்கள் தினம் தினம் லட்சக்கணக்கில் வருகை புரிகின்றனர். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் வரும் நாட்களில் பண்டிகை நாட்கள், வார கடைசி நாள், சுதந்திர தினம் என தொடர்ந்து 9 நாட்கள் உள்ளூர் விடுமுறை என்பதால் மேலும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக 5 ஆயிரம் போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்தி வரதர் தரிசனம் இன்னும் எட்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க கூடும் என்பதால் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது  இந்த நிலையில் 17 ஆம் தேதி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் ஆட்சியர் பொன்னையா. அத்தி வரதர் சிலைக்கு 17 ஆம்  தேதி ஆகம விதிப்படி சில சடங்குகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.