இன்றுடன் அத்தி வரதரின் சயன கோல தரிசனம் நிறைவு பெறுகிறது. நாளை முதல் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் அத்திவரதர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிக அற்புதமான நிகழ்வான அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கியது. முதல் 24 நாளில் சயன கோலத்திலும், அடுத்து வரும் 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சி கொடுப்பது வழக்கம்

இதற்கு முன்னதாக 1979 ஆம் ஆண்டு அத்தி வரதர் வைபவம் நடைபெற்றது. அதன் பின்னர் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தொடங்கியுள்ள அத்தி வரதர் வைபவத்தை காண தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

இந்த முறை ஜூலை 1 முதல் 31 ஆம் தேதியான இன்று வரை சயன கோலத்தில் அத்திவரதர் காட்சி கொடுத்தார். நாளை முதல் நின்ற கோலத்தில் திருப்பதி வெங்கடாச்சலம் போல் காட்சி அளிக்க உள்ளார். இதன் காரணமாக இன்று மாலை 5 மணியுடன் தரிசனம் முடித்து வைக்கப்பட்டது.

சயன கோலத்தில் அத்தி அவரதரை தரிசனம் செய்வதை  காட்டிலும், நின்ற  கோலத்தில் அத்தி வரதரை காணவே பக்தர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால், பக்தர்களின் கூட்டம் நாளை முதல் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது