ஆட்டோவை வீடாக மாற்றிய இளைஞர்..! வெறும் 1 லட்சம் ரூபாயில்... அசத்தல்..! அட பரமத்தி வேலூர் பையன் தானுங்க..!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் வசித்து வரும் அருண் பிரபு என்ற நபர் ஆட்டோவை வைத்தே அழகிய முறையில் வீடு கட்டி உள்ளார். இது குறித்த செய்தி தான் இன்று சமூக வலைத்தளத்தில் ஹாட்டாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த சிறிய வீட்டில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கழிவறை, சமையலறை, கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு தனி இடம், உறங்க வசதி, மின்விளக்கு மின்விசிறி வைப்பதற்கு தனித்தனி இடங்கள், துணி காயப்போட ஏற்றவாறு வசதி, தண்ணீர் சூடு படுத்த தேவையான தனியிடம், மேல்மாடி என சகல வசதிகளுடன் கூடிய சிறிய அழகிய வீட்டை உருவாக்கி உள்ளார்.

இதற்கு அவர் பயன்படுத்திய தொகை ரூபாய் ஒரு லட்சம் மட்டுமே... மேலும் இவ்வாறு உருவாக்குவதற்கு அவர் எடுத்துக் கொண்ட காலம் 6 மாதம் மட்டுமே... இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு இந்த இளைஞரின் முயற்சி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதேவேளையில் ஆட்டோவின் டயர் பஞ்சர் ஆனால் எப்படி மாற்றுவார் என்ற கேள்வியும், சூறைக் காற்று அடித்தால் அந்த ஆட்டோ நிலையாக நிற்குமா என்பது குறித்தும், மழை வரும்போது பாதுகாப்பாக மழைத்தண்ணீர் உட்புகாதவாறு வடிவமைத்துள்ளாரா என்பது குறித்த கேள்வி மட்டும் தான் தற்போது எழுந்துள்ளதே தவிர மற்றபடி மிகச் சிறந்த முறையில் வடிவமைத்துள்ள ஆட்டோ வீடு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமல்லாமல் இந்த இளைஞருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.