திமுக சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் சொந்த ஊரான அன்பில் கிராமத்திற்கு, சென்றபோது அவருக்கு உதித்த சில நினைவலைகளை தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அதில், "எனது சொந்த கிராமமான அன்பில் கிராமத்திற்கு சென்றேன். திரும்பும் வழியில் அன்பில் கிராமம் வழியாகப் பாயும் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தை கடந்தபோது, எனது மதிப்புக்குரிய தாத்தா அன்பில் தர்மலிங்கம் அவர்களுடன் சேர்ந்து அன்பில் கிராமத்திற்கு செல்லும் போது, இந்தப் பாலத்தையும், இந்த இடத்தையும் பற்றியும் கூறியது நினைவுக்கு வந்தது.

அவர் கூறுகையில், "தலைவர் கலைஞர் அவர்களும் நானும், தம்பி முரசொலி மாறன் அவர்களும் தஞ்சையில் ஒரு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திருச்சி திரும்பினோம். ஆனால், அந்தக் கால கட்டத்தில் வாகன வசதிகள் அதிகம் கிடையாது. தஞ்சை மாவட்டத்தில் இருந்து திருச்சி வர பெரும்பாலும் கொள்ளிடம் ஆற்றை கடந்துதான் வர வேண்டும். அப்படி நானும் தலைவர் கலைஞர் அவர்களும் தஞ்சை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அன்பில் கிராமத்திற்கு கொள்ளிடம் ஆற்றில் நடந்து வந்து கொண்டு இருந்தோம்.

அப்போது ஆற்றில் தண்ணீர் அளவு மிகவும் அதிகமாக வர தொடங்கியது. தலைவர் கலைஞர் அவர்களுக்கும் முரசொலி மாறன் அவர்களுக்கும் போதிய நீச்சல் பயிற்சி கிடையாது. எனவே, ஆபத்தை உணர்ந்து தலைவர் அவர்களையும், முரசொலி மாறன் அவர்களை இருவரையும் எனது தோளில் சுமந்து கொண்டு, காட்டாற்று வெள்ளத்தில் நீந்தி கொள்ளிடம் வடக்கு கரையில் அமைந்துள்ள அன்பில் கிராமத்தை அடைந்தோம்", என தாத்தா அன்பில் தர்மலிங்கம் அவர்கள் தெரிவித்தார்.

பழைய நினைவுகள் மனதில் எழுந்ததும் காரை நிறுத்தி, கொள்ளிடம் ஆற்றை நீண்டநேரம் பார்த்தபடி இருந்தேன்.

தலைவர் கலைஞர் அவர்களுக்கும் எனது தாத்தா அன்பில் தர்மலிங்கம் அவர்களுக்கும் இடையில் இருந்த ஆழமான அன்பையும், நட்பையும் எண்ணி மிகுந்த பெருமிதம் அடைந்தேன்" இவ்வாறு பதிவிட்டு தனது நினைவலைகளை மனதில் எண்ணி, பாலத்தின் மீது நின்று சிறிது நேரம் ஆழ்ந்த யோசனையில் மூழ்கி இருந்துள்ளார் அன்பில் மகேஷ். இவரின் இந்த பதிவை தொண்டர்கள் வெகுவாக பகிர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்