ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா ஆகிய இரு விமான போக்குவரத்து நிறுவனங்களும்  கடந்த ஆண்டு  முதல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இரு நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 25 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது. 

கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏப்ரல் 17ஆம் தேதியன்று தற்காலிகமாக விமான போக்குவரத்து சேவைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 

தொழிலை நடத்த தற்காலிகமாக ரூ.983 கோடி அவசர தொகையாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளிடம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கோரியது. எனினும், நிதி வழங்க வங்கிகள் மறுத்ததால் விமான போக்குவரத்து சேவைகள் முடங்கின.

இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்க ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த எடிஹாட் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 


தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் எடிஹாட் நிறுவனத்துக்கு 24 விழுக்காடு பங்குள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்க எடிஹாட் நிறுவனமும் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளது. அதனுடன் இணைந்து முகேஷ் அம்பானியும் கூட்டாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.