தொலைத்தொடர்பு துறை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பிறகு தொலைத்தொடர்பு துறை சந்தையில் கடும் போட்டி நிலவியது. 

நிறுவனங்கள் போட்டி போட்டு அதிரடி சலுகைகள் மற்றும் கட்டண குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இதனால் பல நிறுவனங்களின் வருவாய் கடுமையாக பாதித்தது.


இதற்கு மேலும் சலுகைகள் மற்றும் கட்டண குறைப்பை மேற்கொண்டால் தொழிலை நடத்துவது சிரமம் என உயர்ந்த ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அண்மையில் மொபைல் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தின. 

இதனால் அந்நிறுவனங்களுக்கு ஒரு வாடிக்கையாளர் வாயிலான வருவாய் அதிகரித்தது.இந்நிலையில் நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் நேற்று திடீரென அதிரடியாக குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்துக்கான (28 நாட்கள் வேலிட்டி) கட்டணத்தை ரூ.23-லிருந்து ரூ.45ஆக உயர்த்தியது. 

இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்துக்கான இனி கூடுதலாக ரூ.22 செலவழிக்க வேண்டும். கட்டண செல்லுபடியாகும் கால இறுதிக்குள் ரூ.45 அல்லது அதற்கு அதிகமான வவுச்சரை ரீசார்ஜ் செய்யவில்லை என்றால், சலுகை காலத்துக்கு பிறகு அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.