மிகவும் சிறப்பு பெற்ற ஆடி அமாவாசையான நாளை வீட்டில் செய்ய வேண்டிய சிறப்பு பூஜைகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

ஆடி மாதத்தில் வரும் அமாவாசையை  "ஆடி அமாவாசை" மிகவும் சிறந்த தினமாக கருதப்படுகிறது. இந்த நாளில் நம் முன்னோர்களை வழிபடுவதற்கு ஏற்ற நாளாக கருதி விதவிதமான உணவினை சமைத்து படையலிட்டு வணங்குவர்.

ஆடி அமாவாசை தினத்தன்று, அதாவது நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரமான 4 மணி அளவில் எழுந்து, வீட்டில் உள்ள அனைவரும் தலைக்கு குளித்துவிட்டு உணவோ அல்லது வேறு பானங்கள் எதுவும் அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் மறைந்த முன்னோர்களுக்கு விருப்பமான உணவு பொருட்களை சமைத்து படையிலிட, தயார் நிலையில் வைக்க வேண்டும்.

பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு, அரிசி மாவு கோலமிட்டு, பின்னர் சிறிய மரப்பலகை வைத்து, வெள்ளைத் துணியை அதன் மீது விரிக்க வேண்டும்.. அதில் ஒரு வேட்டியையும் ஒரு புடவையையும் வைக்க வேண்டும். பின்னர் இருபுறமும் குத்துவிளக்கை ஏற்றி வைத்துவிட்டு, பழங்கள், தயார் செய்துள்ள உணவுப் பொருட்களை வைத்து, கற்பூர ஆரத்தி காட்டி முன்னோர்களை நினைத்து கொண்டு வணங்க வேண்டும்.

குறிப்பாக ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலை உணவை உண்ணாமல் விரதம் இருந்து, பூஜை முடிந்த பிறகு படையலிட்ட உணவு எடுத்து காகங்களுக்கு உணவு அளிக்க வேண்டும். அதன் பின்னர் இறைவனை நினைத்து மந்திரங்கள் ஓதி வேண்டிக்கொள்ளலாம். இவ்வாறு மேலும் இன்றைய தினத்தில் ஆடை உணவு உள்ளிட்ட தானத்தை செய்து வந்தால் எப்போதும் ஆசி இருக்கும். மேலும் பரம்பரை சாபங்கள் நீங்கும், முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும், குடும்பம் விருத்தியாகும். இதுநாள் வரை இருந்து வந்த தடைகள் நீங்கும். முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம் .