தனியார் பேருந்தில் உயிர்விட்ட மூதாட்டி..! சாலையில் சடலத்தை வீசி சென்ற அவலம்..!

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல ஒரு தனியார் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி பேருந்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்து உள்ளார். இதனை கண்ட சக பயணிகள் கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு தகவல் தரவே பேருந்தை நிறுத்திவிட்டு மூதாட்டியுடன் வந்தவர் யாராவது உள்ளார்களா என கேட்டுள்ளனர். ஆனால் யாரும் இல்லை என்பதை அறிந்து மூதாட்டியின் உடலை போகும் வழியில் சாலையின் ஓரத்தில் வைத்துவிட்டு அவர் கொண்டுவந்த பையில் இருந்த ஒரு சால்வையை எடுத்து அவர் மீது போர்த்தி விட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது செய்யாறு பகுதியைச் சேர்ந்த பூசணம் என்ற 60 வயது மதிக்கத்தக்க இந்த மூதாட்டி, பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு தன் சொந்த ஊருக்கு திரும்ப காட்பாடி ரயில் நிலையம் வந்துள்ளார் அங்கிருந்து கிளம்பும்போது தான் மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவருடைய மகன் மஞ்சுநாத்துக்கு தகவல் தெரிவிக்கவே அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தன் கார் மூலம் அவரது தாயின் உடலை கொண்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தின் மூலம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் மனித நேயமும் இல்லாமல் மனித உயிருக்கு மதிப்பு கொடுக்காமல், பேருந்தில் எத்தனையோ பயணிகள் இருந்தும் ஒருவர் கூடவா மனசாட்சியுடன்  இருக்க மாட்டார்கள்? ஒருவர் கூடவா மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டிருக்க மாட்டார்கள்? என பல கேள்விகளோடு முடிகிறது இந்த சம்பவம்.