தன் பிள்ளைகள் படிப்புக்காக தன் கழுத்தில் இருக்கும் தாலியை அடமானம் வைத்து டிவி வாங்கி கொடுத்து அதன் மூலம் ஆன்லைன் வகுப்பில் படிக்க வைத்த தாயை உலகமே பாராட்டி வருகின்றது.

கொரோனா பாதிப்பு மக்களை புரட்டியெடுத்தால் வருமானம் இன்றி நடுத்தர ஏழை மக்கள் செத்து சுண்ணாம்பாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றன.அதே நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சந்தனா சேனலில் ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகின்றது. நான்கு பிள்ளைகளை பெற்ற தாய் தன் பிள்ளைகள் ஆன்லைனில் நடத்தப்படும் பாடத்தை படிக்க வேண்டும் ஏற்பதற்காக ஏற்கனவே இருந்த டிவி பழுதடைந்ததால் தன் தாலியை அடமானம் வைத்து அவர்களுக்கு புது டிவி வாங்கி கொடுத்த செய்தி காட்டு தீ போல் சமூக வலைதளங்களில் பரவியது.அதன் பிறகு அந்த தாய்க்கும் குழந்தைகளுக்கும் நிதிகள் போட்டி போட்டுக்கொண்டு மனிதநேயமிக்கவர்கள் அள்ளிக்கொடுத்து வருகிறார்கள்.


  கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம். நரகுந்து தாலுகா ராதேரா நாகனூர் கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி. இவருக்கு மொத்தம் 4 பிள்ளைகள். இதில் ஒரு மகன் 6-ம் வகுப்பும், ஒரு மகள் 8-ம் வகுப்பும் அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். தற்போது கொரோனாவால் கர்நாடக பள்ளி கல்வித் துறை சார்பில் சந்தனா சேனலில் ஆன்-லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஏற்கனவே இருந்த டி.வி. பழுதடைந்து பல மாதங்கள் ஆவதால், அந்த குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலை இருந்தது.இதனால் கஸ்தூரி தனது தாலி சங்கிலியை அடகு வைத்து பிள்ளைகளின் படிப்புக்காக டி.வி.யை வாங்கி கொடுத்தார். இதுதொடர்பான செய்திகள் கன்னட செய்தி தொலைக்காட்சி, சமூகவலைத்தளங்களில் வெளியாகியது. இதைதொடர்ந்து மாநில கனிமவளத் துறை மந்திரியும், கதக் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான சி.சி.பட்டீல் குழந்தைகளின் கல்விக்கு நிதி உதவி வழங்குவதாகவும், அவர்களை படிக்க வைப்பது தனது பொறுப்பும் என்று அறிவித்தார். அத்துடன், கஸ்தூரியின் தாலி சங்கிலியை வாங்கி பணம் கொடுத்த அடகு கடைக்காரரும், அந்த தாலி சங்கிலியை நேற்று முன்தினம் திருப்பி கொடுத்து மனிதநேயத்தை வெளிப்படுத்தினார்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமது கான் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கியுள்ளார்.இவர்களது குடும்பத்திற்கு ரூ.15 ஆயிரத்தையும், குழந்தைகளின் படிப்புக்காக ரூ.35 ஆயிரத்தையும் அவர் வழங்குவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதுபோல் மந்திரி சி.சி.பட்டீல், தனது ஆதரவாளர்கள் மூலம் கஸ்தூரியிடம் ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார். சம்பவம் பற்றி தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளும், கஸ்தூரியின் வீட்டுக்கு சென்று அவர்களது பொருளாதாரம் பற்றிய விசாரணை நடத்திய பிறகு மாதம் தோறும் ரூ.ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அதிகாரிகள் உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள்.
 ஆன் லைன் வகுப்புகள் ஏழைக்குழந்தைகளுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் எட்டாக்கனியாகவே அமைந்துள்ளது.இந்தியாவில் இன்னும் எத்தனையோ தாய்மார்கள் கஸ்தூரி போன்று நடைபிணமாகவே வைராக்கியத்தோடு தன் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என்று உயிரோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.