ரயிலிலேயே பிரசவம்..! நள்ளிரவு ... வில்லிவாக்கம் ஸ்டேஷனை கடக்கும் போது நடந்த பரபரப்பு சம்பவம்...!

ரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு பயணத்தின் போதே குழந்தை பிறந்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து உள்ளது.

திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் கீர்த்தனா என்ற கர்ப்பிணி பெண்ணும் பயணம் செய்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள கோரமங்கலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்.

கடந்த சில மாதங்களாகவே சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்த இவர் பிரசவ நேரம் நெருங்க உள்ளது என்பதால் மீண்டும் பரிசோதனைக்காக ரயிலில் தனியாகவே பயணம் செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் ரயில் வில்லிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் உடன் பயணித்த பயணிகளே  கர்ப்பிணி பெண்ணிற்கு உதவி செய்து பிரசவம் பார்த்தனர்.

பின்னர் ஒரு மணி அளவில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த ரயிலில் இருந்து, ரயில்வே போலீசார் உதவியுடன் கீர்த்தனா மற்றும் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர உதவிக்காக தனியார் அவசர உதவி மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு மீண்டும் எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யாரும் எதிர்பாராதவிதமாக ரயிலிலேயே பிரசவம் நடைபெற்றதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.