ராகவா லாரன்ஸ் காதில் விழுமா இந்த விஷயம்..?

ராஜபாளையத்திலிருந்து நடிகர் ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்பதற்காக சென்னை வந்திருக்கும் ஒரு குடும்பம் தற்போது ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 ஆவது மேடையில் இந்த குடும்பம் அங்கும் இங்கும் அலைந்து, அவர்களுக்கு கிடைக்கும் ஐந்து பத்து ரூபாயை வைத்து உணவு வாங்கி சாப்பிடும் அவலம் பார்க்க முடிகிறது.

இந்தப் பெண்ணின் பெயர் குரு லட்சுமி.. அருகில் இருக்கும் நபர் தம்பி வெங்கடேசன். இந்த சிறுவன் பெயர் குரு சூர்யா...குரு லட்சுமிக்கு பிறந்த ஒரே ஒரு மகன். குரு லட்சுமியின் கணவர் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளார். இப்படி ஒரு இக்கட்டான சூழலில் தன் மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சென்னையை நோக்கி வந்துள்ளனர் குரு லட்சுமி மற்றும் அவருக்கு துணையாக தம்பி வெங்கடேசன்

என்ன நடந்தது..? 

குரு சூர்யாவிற்கு திடீரென நடக்க முடியாமல் போயுள்ளது... பின்னர் வாய் பேசவும் முடியாத சூழல் உருவாகியுள்ளது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய எடையும் குறைந்து வருகின்றது. எப்படியாவது குரு சூர்யாவை காப்பாற்றியே ஆகவேண்டும் என வெங்கடேசனும் அவருடைய அக்கா குரு லட்சுமியும் மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கி உள்ளனர். இருந்தாலும் தீராத நோய் தீர்ந்தபாடில்லை.

பின்னர் யாரோ ஒருவர் வெங்கடேசனிடம் சென்னை சென்று, ராகவா லாரன்சை சந்தியுங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்வார் என கூறவே அடுத்த நொடியே தாங்கள் அணிய தேவையான ஒருசில ஆடைகளை எடுத்துக்கொண்டு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஆனால் விலாசம் தெரியாமல் ராகவா லாரன்சை சந்திக்க முடியாமல்.. ரயில் நிலையத்திலேயே அமர்ந்து, வந்து செல்பவர்களிடம் 5 ரூபாய், 10 ரூபாய் வாங்கி உணவு உண்டு வருகின்றனர்.

மேலும் ஊருக்கு திரும்பவும் முடியாமல் மகனுக்கு சிகிச்சையும் அளிக்க முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் பிளாட்பாரத்திலேயே தங்கி இருக்கின்றனர் இவர்கள். மேலும் வெங்கடேசன் தனக்கு ஏதாவது வேலை கொடுங்கள் என அங்கு போபவர்களிடமும் வருபவர்களிடமும் கெஞ்சும் ஒரு நிலையும் காணப்படுகிறது.

இப்படி ஒரு சோதனை வேறு எந்த ஒரு நபருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே அனைவரின் எண்ணம். இந்த செய்தி ராகவா லாரன்ஸ் காதில் விழுமா ? லாரன்ஸ் முன்வந்து உதவி செய்வாரா ? வேறு யாராவது தக்க உதவியையை செய்வார்களா என்பதே அனைவரின் வேண்டுதலாக உள்ளது.