நினைவிருக்கிறதா ஆசிரியர் பகவான்..! 

திருத்தணியை அடுத்த வெள்ளியகரம் என்ற இடத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக ஆசிரியர் பகவான் மீது போலீசில் புகார் தெரிவித்து உள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொம்மராஜபேட்டையை சேர்ந்தவர் ஆசிரியர் பகவான். இவர் அங்குள்ள பள்ளிப்பட்டு என்ற கிராமத்தில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். முன்னதாக வெள்ளியகரத்தில் பணியாற்றியபோது பணியிடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பணியிட மாற்றத்தின்போது இவருடைய இடமாற்றத்திற்கு பள்ளி மாணவ மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பகவானை பள்ளியில் இருந்து வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி கதறி கதறி அழுதனர்.

இது குறித்த வீடியோ அப்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதன் மூலம் ஆசிரியர் பகவான் அனைவராலும் பேசப்பட்டு புகழப்பட்டார். இந்த நிலையில்தான் வெள்ளியகரம் என்ற ஊரில் உள்ள நாதமுனி என்பவரின் மகளை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு, பின்னர் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் ஆசிரியர் பகவானை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அனைவர் மத்தியிலும் நன்மதிப்பை பெற்ற ஆசிரியர் பகவானா இந்த மாதிரி ? என ஆச்சரியத்துடன் மக்கள் வியக்கின்றனர்.இதுகுறித்து விசாரணை முழுமை அடைந்த பின்னரே உண்மை என்னவென்று தெரியவரும். அதன் பின்னரே ஆசிரியர் பகவான் குறித்த பல செய்திகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.