40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிக முக்கிய நிகழ்வான அத்திவரதர் வைபவம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, தினமும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். 48 நாட்களில் முதல் 24 நாட்கள் சயனகோலத்தில் அதாவது படுத்தவாறு அத்திவரதர் தரிசனம் கொடுப்பார். ஆனால் இந்த முறை மட்டும் சிலையின் உறுதி தன்மையை கருத்தில் கொண்டு ஜூலை 1 முதல் 31ஆம் தேதி வரை 31 நாட்களும் சயன கோலத்திலேயே அத்திவரதர் காட்சி அளித்தார்.

பின்னர் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். இந்த நிலையில் அத்திவரதரை நின்று நிலையில் காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் திரளாக வருகின்றனர். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதுதவிர இன்னும் 10 நாட்கள் மட்டுமே அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார் என்பதால்,  நாளுக்கு நாள் கூட்ட நெரிசல் அதிகரிக்க கூடும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது அரசு.

அதற்காக இன்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 13 14 16 ஆகிய நாட்களில்  உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் வரும் 10 மற்றும் 11ஆம் தேதி சனி ஞாயிறு என்பதால், அப்போதும் விடுமுறைதான்.. தொடர்ந்து 12-ஆம் தேதி பக்ரீத், 13,14,16 அரசு  விடுமுறை, 15ம் தேதி சுதந்திர தினம், 16,17 ஆம் தேதி சனி ஞாயிறு என தொடர்ந்து 9 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் வாகனங்களை பள்ளி வளாகங்களில் நிறுத்தவும் ஓய்வு எடுக்கவும் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாணவர்கள் லீவு விட்டுள்ளதை நினைத்து ஜாலியாக இருப்பதா அல்லது பக்தர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பதா என்ற சிந்தனையில் உள்ளனர்.