சென்னை மீஞ்சூரில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து 6 வயது சிறுமி அதிகை முத்தரசியும் அவரது தந்தையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். 

அந்த கோரிக்கை மனுவில் கல்வி கற்பதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் பள்ளியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் அருகில் கோவில் ஒன்று இருப்பதாகவும், பள்ளி வளாகத்தில்  பிச்சை எடுப்பவர்கள் மற்றும் முகம் தெரியாத நபர்கள் ஓய்வு எடுக்கும் இடமாக பயன்படுத்தி வருவதாகவும், சட்டவிரோத செயல்களும் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார சீர்கேடு உள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கு அவ்வப்போது உடல்நல குறைவு ஏற்படுகிறது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் இரண்டுமாதங்களில் அரசு அதிகாரிகளிடம் இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

மேலும் இதில் தொடர்புடைய திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அதிகாரி உள்ளிட்டோர் நேரில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த பொதுநல வழக்கில் 6 வயது  சிறுமி  முத்தரசி  ஈடுபட்டு பள்ளி குழந்தைகளுக்காக நல்ல முயற்சியை எடுத்திருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது இக்குழந்தைக்கு பொதுமக்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

அதிகை முத்தரசி அதே பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து  வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.