தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு ஆந்திர கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அது அடுத்த 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். அக்டோபர் 9,10 11 ஆகிய நாட்களில் அந்தமான் மத்திய மற்றும் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று பலமாக வீசக்கூடும்.

இதனால், அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். என எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்’’என்றும் தெரிவித்துள்ளது.