இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நான்காம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்பை இழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது சொந்த மண்ணை நோக்கி பல ஆயிரம் கிலோ மீட்டர் நடந்தே பயணிப்பதை தினந்தோறும் கண்டு வருகிறோம். வாழ்வாதாரத்தை தேடியும், உறவுகளை காணவும் புறப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்களை பத்திரமாக சொந்த மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் செயல்பட்டு வருகின்றன. 

கடந்த மார்ச் மாதம் முதன் முறையாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே பல்வேறு பாசப் போராட்டங்களை கண்டு வருகிறோம். தெலங்கானாவைச் சேர்ந்த ரஸியா பேகம் என்ற தாய் ஒருவர் ஊரடங்கால் மாட்டிக்கொண்ட தனது மகனை மீட்பதற்காக 1,400 கிலோ மீட்டர்கள் இருசக்கர வாகனத்தில் பயணித்து, ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிக்கித் தவித்த தனது மகனை மீட்டு வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. 

இரண்டு நாட்களுக்கு முன்பு காலில் படுகாயமடைந்த தனது தந்தையை 15 வயது சிறுமி சைக்கிளில் வைத்து சொந்த ஊர் அழைத்துச் சென்றது, அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளான இவாங்கா டிரம்ப் வரை கவனம் ஈர்த்தது. பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் பஸ்வான் என்பவர் டெல்லியில் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டி வந்தார். ஊரடங்கால் கடந்த 2 மாதமாக வேலை மற்றும் வருமானம் இன்றி தவித்து வந்துள்ளார். இனியும் இங்கு இருந்தால் சரிபட்டு வராது என்று முடிவெடுத்த மோகன் பஸ்வானின் 15 வயது மகள் ஜோதி குமாரி, காலில் அடிப்பட்ட தனது தந்தையை சைக்கிளில் வைத்து 7 நாட்கள் பயணித்து சொந்த ஊர் கொண்டு சேர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற அஜித், ஷாலினி... காரணம் இதுவா?

இவர்களைப் போலவே ஊரடங்கால் கடந்த 3 மாதங்களாக தனது தாயை பார்க்காமல் தவித்து வந்த 5 வயது சிறுவனின் துணிச்சலான பயணமும் காண்போரை மெய் சிலிர்க்கவைத்துள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக விமானம் உள்ளிட்ட அனைத்து விதமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் ஊரடங்கிற்கு முன்பு பெங்களூருவில் இருந்து டெல்லி சென்ற விஹான் சர்மா என்ற 5 வயது சிறுவன் அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இதையும் படிங்க: இந்த குட்டி பாப்பா இரண்டு பேரும் யாருன்னு தெரியுதா?... இவங்க தான் இப்ப சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்கள்...!

இதனிடையே இன்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில், டெல்லி டூ பெங்களூரு வந்த விமானத்தில் சிறுவன் விஹான் சர்மா தன்னந்தனியாக பயணிந்து வந்துள்ளார். மாஸ்க், கையுறை என சகலவிதமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி விமானத்தில் பயணம் மேற்கொண்ட விஹான் பெங்களூரு விமான நிலையத்தில் தாயை கண்டதும் ஆனந்தத்தில் துள்ளிகுத்தித்தார். இதுகுறித்து பெங்களூரு விமான நிலையம் தனது ட்விட்டர் பக்கத்தில்,“விஹானை சொந்த ஊருக்கு வரவேற்கிறோம். அனைத்து பயணிகளும் பத்திரமாக ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என தெரிவித்துள்ளது. தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் 5 வயது சிறுவன் மேற்கொண்ட இந்த அசாத்திய பயணம் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.