ஆடிப்போன எஸ்.பி...! 5 நிமிடத்தில் கள்ளச்சாராய கும்பலை ரவுண்டு கட்டிய 3 பள்ளி  மாணவர்கள்...! 

மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் "சிறப்பு காவல் துறை பயிற்சி" அதாவது ஸ்பெஷல் போலீஸ் கேடட்ஸ் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டு, இந்த திட்டத்தில் 6 முதல் 8 ஆம்  வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களில் ஒரு சிலரை தேர்வு செய்து, இந்த சிறப்பு காவல் துறை பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

காவலருக்கு கொடுக்கப்படுவது போலவே இந்த மாணவர்களுக்கும் ஒருசில பயிற்சியும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்துள்ளது. பயிற்சியின் போது அவர்களும் காவலர்கள் போலவே காக்கி சட்டை அணிய வைத்துள்ளனர். இந்த மாணவர்கள் 40 பேர் ஜபல்பூர் மாவட்ட எஸ்பியை சந்தித்து சில நிமிடங்கள் உரையாடி உள்ளனர்.

அப்போது எஸ்பி அமித்குமார் சிங் உங்களில் யாருக்காவது எஸ்பி ஆகவேண்டும் என்ற ஆசை உள்ளதா? என்ற கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அந்த 40 மாணவர்களில் 3  நபர்கள்  முந்திக்கொண்டு கையை உயர்த்தி தனக்கு அந்த ஆசை உண்டு என தெரிவித்து உள்ளனர். உடனடியாக அவர்கள் மூவரையும் அழைத்து உங்களுக்கு 5 நிமிடம் நேரம் கொடுக்கிறேன் ஒரு எஸ்பியாக நீங்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை காண்பியுங்கள் என தெரிவிக்கவே உடனடியாக 5நிமிட எஸ்பியாக செயல்பட்ட மூன்று சிறுவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலை பிடிக்க அப்பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இவர்களின் உத்தரவின்பேரில் பல நாட்களாக பதுங்கியிருந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ளனர் காவல்துறையினர். இதுதவிர தங்கள் பகுதியில் வசிக்கும் காவல்துறையினர் சிலரே லஞ்சம் வாங்குவதாகவும் எஸ்பியிடம் தெரிவித்துள்ளனர். இந்த சிறுவர்கள் மூன்று பேரும் தன்னுடைய ஆசைக்காக ஐந்து நிமிட எஸ்பியாக செயல்படுவார்கள் என்று நினைத்த எஸ்பிக்கு பெரும் மகிழ்ச்சியும் ஆச்சர்யத்தையும்  கொடுக்கும் விதமாக, உண்மையான எஸ்பியாக செயல்பட்டு நீண்ட நாட்களாக மறைந்திருந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த பெரும் கும்பலை பிடித்து இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.