இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,104 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.  முழு ஊரடங்கு என்பது கடைசி ஆயுதம் தான். எனவே மக்கள் முக கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராமல் தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று முன் தினம் 2.95 லட்சமாக இருந்த பாதிப்பு நேற்று 3.14 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 3,14, 835 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா மொத்த பாதிப்பு 1,56,16,130லிருந்து 1,59,30,965 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் கொரோனாவுக்கு 2,104 பேர் பலியாகியுள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பால் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,82,553 லிருந்து 1,84,657 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,32,76,039 லிருந்து 1,34,54,880 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் இந்தியாவில் 1,78,841 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.