40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் இன்றோடு 20 நாளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருகிறது.

கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அறநிலையத்துறையும் சில ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் நான்கு பேர் பரிதாபமாக மூச்சுதிணறி உயிரிழந்தனர். பின்னர் நேற்று எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடங்கியது அறநிலையத்துறை. இதன் மூலம் ஆன்லைனில் ரூபாய் 300 செலுத்தி மாலை 6 மணி முதல் 10 மணி வரை தரிசனம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மட்டுமின்றி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல், காலை முதல் இரவு வரை போராடி வரும் காவலர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இவர்களும் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு மயங்கி விழுந்த இரண்டு காவலர்களுக்கு அங்கிருந்த மக்கள் உணவளித்து அவர்களுக்கு உதவி செய்யும் இந்த போட்டோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.