உத்தர பிரதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் இதுவரை 100 புத்தகங்களுக்கு மேல் எழுதி பெரும் சாதனை படைத்து உள்ளதால் உலகமெங்கும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மிரிகேந்திர ராஜ்.இவர் புத்தகங்களை தொடர்ந்து எழுதி வருகிறார். ஆறு வயதாக இருக்கும் போதே புத்தகத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டதாகவும் வாசிப்புத் திறன் அதிகமாக இருந்ததாகவும் அதன் காரணமாக தானும் புத்தகம் எழுத தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சிறுவன் இதுவரை 135 புத்தகங்களுக்கும் மேலாக எழுதி சாதனை படைத்துள்ளார். இந்த புத்தகங்கள் அனைத்தும் குறைந்தபட்சம் 25 பக்கங்கள் முதல் 100 பக்கங்கள் கொண்டவைகளாக இருக்கும். இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு பிரபல தலைவர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை அனைவர் பற்றியும் மிக சிறப்பாக எழுதியுள்ளார் இந்த சிறுவன்.

இதன் மூலம் தற்போது நான்கு உலக சாதனைகளை புரிந்துள்ளதாகவும், இவருடைய சிறந்த சேவை மற்றும் திறனைப் பாராட்டி லண்டன் உலக சாதனைகள் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் தர அழைப்பு விடுத்துள்ளதாகவும் மிரிகேந்திர ராஜ் தெரிவித்துள்ளார்.

வருங்காலத்தில் அதிக அளவிலான, அனைவருக்கும் பயன்படக்கூடிய புத்தகங்களை எழுத வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த சிறு வயதிலேயே இவ்வளவு ஆர்வம் கொண்ட சிறுவனின் திறமையை பாராட்டி நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு நபர்கள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.