1 மணி வரை 10 லட்சம் மளிகை கடைகள் திறந்து வைக்கப்படும்..! 

24 மணி நேரமும் தமிழகத்தில் கடைகள் திறந்து வைக்கலாம் என அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 10 லட்சம் மளிகை கடைகள் இரவு ஒரு மணி வரை செயல்பட உள்ளது என தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர்
எஸ்.பி.சொரூபன் தெரிவித்து உள்ளார். 

இது குறித்து சொரூபன் தெரிவிக்கும் போது, "இதற்கு முன்னதாக மத்திய மாநில அரசுகளிடம் கடை அடைப்பு நேரம் அதிகரிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால் அதற்கான அனுமதி அப்போது தரவில்லை. இந்த நிலையில் 24 மணி நேரமும் வணிக நிறுவனங்கள்,கடைகள் திறந்து வைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். இதனால் அதிகமாக பயன் அடையப் போவது பொதுமக்கள் தான். இனிமேல் எந்த நேரத்தில் நினைத்தாலும்... எந்த பொருளை வாங்க வேண்டுமென நினைத்தாலும் வாங்கிக் கொள்ளும் வகையில்... வசதிக்காக 24 மணி நேரமும் வணிக வளாகங்கள் திறந்திருக்கும்.

மேலும் தமிழகத்தை பொறுத்த வரையில், 10 லட்சம் மளிகை கடைகள் தற்போது இயங்கி வருகின்றன. பொதுவாகவே மளிகை கடைகள் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். ஆனால் இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஒரு மணி வரை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மெயின் ரோட்டில் கடைகள் இருப்பதை விட தெருக்களில் தான் அதிகம் கடைகள் இருக்கின்றன. எனவே அந்த அளவிற்கு காவல்துறையினரின் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக உள்ளது.

பொதுவாகவே காலை 6 மணிக்கு கடைகள் திறக்க வேண்டும் என்றால் விடியற்காலையிலேயே எழுந்து இருக்க வேண்டும். அதற்கு சற்று சிரமமாக இருக்கும். இந்த அறிவிப்புக்குப் பின்னர் இரவு நீண்ட நேரம் கடையை திறந்து வைப்பதன் மூலம் காலை நேரத்தில் சற்று தாமதமாக கடையை திறக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதற்கு முன்னதாக மதுரையில் மட்டுமே தூங்கா நகரம் ஒன்று இருந்தது. இனிமேல் எல்லாம் மாவட்டங்களும் தூங்கா நகரமாக மாறும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்காது.

இதன் மூலம் பொது மக்கள் தான் அதிக பயன் அடைவார்கள் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொண்டு, தமிழகத்தின் இந்த அரசாணைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார் சொரூபன்.