ஒரு கிலோ வெங்காயம் ரூ.200 ? பெரும் அதிருப்தியில் வியாபாரிகளும் பொதுமக்களும்...! 

நாளுக்கு நாள் வெங்காயம் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூபாய் 200 தொடும் அவல நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் வெங்காயத்தின் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால் தொடர் விலை ஏற்றம் கண்டு வருகிறது. அதன்படி தற்போது பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூபாய் 100 லிருந்து 150 வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை ரூபாய் 140 இல் இருந்து 180 வரை விற்கப்படுகிறது.

இதற்கெல்லாம் காரணம் வட மாநிலங்களில் இருந்தும் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் வெங்காயத்தின் இறக்குமதி குறைந்து உள்ளதாகவும், இதன் காரணமாகவே தொடர் விலை ஏற்றம் ஏற்படுகிறது என தெரிவித்து உள்ளனர்.

பொதுவாகவே 20 டன் வெங்காயம் 100 லாரிகளில் கொண்டு வரப்படும். ஆனால் தற்போது கோயம்பேடுக்கு 35 லாரிகளில் மட்டுமே வெங்காய வரத்து உள்ளது. இதற்கு முன்னதாக சென்ற ஆண்டில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.45 ஆகவும், சின்னவெங்காயம் ரூபாய் 160 ஆகவும் இருந்தது. ஆனால் தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாயை எட்ட வாய்ப்பு உள்ளது என்பதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

தொடர் வெங்காய விலை உயர்வு உள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும்  சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.