தேர்தல் பறக்கும் படை என கூறி தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து 1 .07 கோடிரூபாயை  பறித்து சென்றுள்ளது ஒரு திருட்டு கும்பல். வரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த தருணத்தில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் பல்வேறு இடங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இருசக்கர வாகன முதல் சொகுசு கார்கள் வரையில் சந்தேகத்தின் அடிப்படையில் பல இடங்களில் சோதனை செய்து வருகின்றனர் போலீசார். இதற்கிடையில் காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் என்ற பகுதியில் கட்டுமான நிறுவனத்தின் மேலாளராக பணி புரிய கூடிய உதயகுமார் என்பவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாயை ஒரு திருட்டு கும்பல் பறித்துள்ளது. இவர் வேப்பேரியில் உள்ள ஒரு வங்கியில் ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்று அங்கிருந்து காரில் திரும்பியுள்ளார். இதனை நோட்டமிட்ட ஒரு கும்பல் அவரை பின் தொடர்ந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சைதாப்பேட்டை பகுதியை கடக்கும் போது திடீரென மற்றொரு கார் ஒன்று அவரை மறித்து, உதய குமாரை கடத்தி சென்றதாக தெரிகிறது.

மேலும் தாங்கள் தேர்தல் பறக்கும் படையினர் என்றும் காரை சோதனை போட வேண்டும் கூறி காரில் இருந்த பணத்தை எடுத்துள்ளனர்.பின்னர் பூந்தமல்லி அருகே உள்ள ஒரு இடத்தில் காரை நிறுத்தி உதயகுமாரை அடித்து இறக்கி விட்டுள்ளனர்.

இதன் பிறகு உதயகுமார் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உதயகுமார் சொல்வது எந்த அளவிற்கு உண்மை? என சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.