மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பெண்கள் அணியும் இறுக்கமான லெக்கின்ஸ், பேண்ட், ஆண்கள் டி.சர்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு செல்லும் ஆண், பெண் பக்தர்கள் ஆடை வி‌ஷயத்தில் கவனம் செலுத்தாமல் இஷ்டத்துக்கு உடை அணிந்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து 2016-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ’’வேட்டி, சேலை, சல்வார், சுடிதார் அணிந்து செல்ல உத்தரவிட்டனர்’’. ஆனால், இது அனைத்து கோவில்களிலும் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்கிற கேள்வியும் எழுந்தது.

இந்த நிலையில்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் லெக்கின்ஸ், டி.சர்ட் அணியக்கூடாது என்றும் வேட்டி, சேலை மற்றும் நாகரீகமான உடைகளை அணிந்து வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கோவில் அதிகாரிகள் பிறப்பித்து உள்ளனர். இதையடுத்து இந்த ஆடை கட்டுப்பாட்டை அனைத்து கோவில்களிலும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்