சென்னையில் ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா... சுழன்றடிக்கும் நோய்த்தொற்று..!
சென்னையில் உள்ள ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
சென்னையில் உள்ள ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
பெருங்குடியில் உள்ள தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தது சுகாதாரத்துறை. அவர்களில் 40 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அந்நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 11 நாட்களில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பல வாரங்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 500 க்கும் கீழ் பதிவாகி வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், தஞ்சை, காஞ்சிபுரம், திருப்பூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 11 நாட்களில் 10 ஆயிரத்து 65 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 3 ஆயிரத்து 907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 15 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 886 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் நோய் பரவல் ஏற்பட்டுள்ள தஞ்சை மாவட்டத்தில் 508 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் திருப்பூரில் புதிதாக 321 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது நோய் பரவல் வேகமாக இருப்பதையே காட்டுகிறது.