செம்ம குட் நியூஸ்... இனி ஜூன் 30 வரை டென்ஷன் கிடையாது... கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு!
ஆதாருடன் பான் எண்ணை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது.
குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.
இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்கவேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. பல முறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த மத்திய அரசு இந்த முறை நீட்டிக்காமல் மார்ச் 31-ம் கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும், அப்படி இணைக்கப்படாத பான் கார்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இல்லையென்றால் வங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் செலுத்துபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலின் வேகம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.