Asianet News TamilAsianet News Tamil

கேகேஆரை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி.. மும்பை இந்தியன்ஸை பின்னுக்குத்தள்ளி புள்ளி பட்டியலில் 2ம் இடம்

கேகேஆர் அணி நிர்ணயித்த 85 ரன்கள் என்ற எளிய இலக்கை 14வது ஓவரில் அடித்து ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸை பின்னுக்குத்தள்ளி 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது ஆர்சிபி.
 

rcb beat kkr by 8 wickets and got 2nd place in points table of ipl 2020
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Oct 21, 2020, 10:51 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில்லும் ராகுல் திரிபாதியும் களத்திற்கு வந்தனர்.  2வது ஓவரை வீசிய முகமது சிராஜ், அந்த ஓவரின் 3வது பந்தில் திரிபாதியை ஒரு ரன்னிலும், அதற்கடுத்த பந்திலேயே நிதிஷ் ராணாவையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார். அந்த ஓவரில் ரன்னே வழங்காமல் மெய்டன் ஓவராகவும் வீசினார். 

நவ்தீப் சைனி வீசிய அதற்கடுத்த ஓவரில் ஷுப்மன் கில்லை சைனி ஒரு ரன்னில் வீழ்த்தினார். ஆனால் அந்த ஓவரில் 10 ரன்கள் கொடுத்தார். இதையடுத்து 4வது ஓவரை வீசிய முகமது சிராஜ், அந்த ஓவரையும் மெய்டனாக வீசியதுடன், டாம் பாண்ட்டனை 10 ரன்களுக்கு அவுட்டாக்கினார். 2 மற்றும் 4 ஆகிய 2 ஓவர்களையும் அடுத்தடுத்து மெய்டனாக வீசினார் முகமது சிராஜ்.

இதன்மூலம் ஐபிஎல்லில் அடுத்தடுத்த 2 ஓவர்களை மெய்டன் ஓவராக வீசிய முதல் பவுலர் என்ற சாதனையை சிராஜ் படைத்தார். பவர்ப்ளேயில் 4 விக்கெட் இழப்பிற்கு வெறும் 14 ரன்கள் மட்டுமே அடித்த கேகேஆர் அணி, தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டையும் 4 ரன்களுக்கு இழந்தது. 

அதன்பின்னர் பாட் கம்மின்ஸ் 4 ரன்களுக்கு சாஹலின் சுழலில் அவுட்டாக, கேப்டன் இயன் மோர்கன் அதிகபட்சமாக 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, ஃபெர்குசன் 19 ரன்களும் குல்தீப் யாதவ் 12 ரன்களும் அடிக்க, 20 ஓவர் முழுவதும் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 84 ரன்கள் மட்டுமே அடித்தது. 

ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாஹல் 2 விக்கெட்டுகளையும் சைனி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

85 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச்சும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தனர். 7வது ஓவரின் 2வது பந்தில் ஃபின்ச் 16 ரன்களுக்கு ஃபெர்குசனின் பந்தில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் 25 ரன்களுக்கு படிக்கல் ரன் அவுட்டானார். அதன்பின்னர் குர்கீரத் சிங் மன்னும் கேப்டன் கோலியும் இணைந்து இலக்கை வெற்றிகரமாக விரட்டினர். 14வது ஓவரிலேயே இலக்கை எட்டி ஆர்சிபி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளை பெற்ற ஆர்சிபி அணி, மும்பை இந்தியன்ஸை பின்னுக்குத்தள்ளி புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறியது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios