ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளுக்குமே பிளே ஆஃப் வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கும் நிலையில், இரு அணிகளுமே வெற்றி பெறும் முனைப்பில் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன. துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர், பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பாவும் பென் ஸ்டோக்ஸும் களமிறங்கினர். பென் ஸ்டோக்ஸ் சரியான ஷாட் கனெக்ட் ஆகாமல் திணற, ராபின் உத்தப்பாவோ, நல்ல ஃப்ளோவில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். ராபின் உத்தப்பாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் அதை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடாமல், 13 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 19 ரன்கள் அடித்திருந்த நிலையில், தேவையில்லாமல் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸுடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் வழக்கம்போலவே நல்ல ஷாட்டுகளை தெளிவாக ஆடி நன்றாக தொடங்கினார். மறுமுனையில், ஆரம்பம் முதலே பென் ஸ்டோக்ஸ் அடித்து ஆடமுடியாமல் திணறிக்கொண்டிருக்க, சாம்சன் நன்றாக ஆடினார். 26 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 36 ரன்கள் அடித்த நிலையில், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் ஆட்டமிழக்க, தொடக்கம் முதலே திணறிய பென் ஸ்டோக்ஸ், 32 பந்தில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

களத்தில் செட்டில் ஆகியிருந்த சாம்சன் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் முறையே அடுத்தடுத்த ஓவர்களில்(12, 13) ஆட்டமிழக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. அதற்கு காரணம் பென் ஸ்டோக்ஸ் 13வது ஓவரின் முதல் பந்தில் அவுட்டாகும்போது அணியின் ஸ்கோர் வெறும் 86. 

ரஷீத் கானுக்கு எதிராக 4 முறை அவுட்டாகியுள்ள பட்லர், அவரை எப்படியாவது சமாளித்து ஆடவேண்டும் என்ற முனைப்பில் அதை சரியாக செய்தார். ஆனால் ரஷீத் கானிடம் தப்பிய பட்லர், விஜய் சங்கரிடம் சிக்கினார். விஜய் சங்கர் வீசிய 16வது ஓவரின் 3வது பந்தில் பட்லர் ஆட்டமிழந்தார். 12 பந்தில் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த இளம் வீரர் ரியான் பராக், நடராஜன் வீசிய 18வது ஓவரில் அருமையாக ஆடினார். 

ஸ்மித் பதினைந்து பந்தில் 19 ரன்களுக்கு 19வது ஓவரில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் ரியான் பராக்கும் ஆட்டமிழந்தார். ரியான் பராக் 12 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நடராஜன் வீசிய கடைசி ஓவரில் ஆர்ச்சர் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் விளாச, 20 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 154 ரன்கள் அடித்து 155 ரன்கள் என்ற இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு நிர்ணயித்துள்ளது.

ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன் ஆகிய செட்டில் ஆன பேட்ஸ்மேன்கள் தேவையில்லாமல் அற்பமாக தங்கள் விக்கெட்டுகளை இழந்ததால் பெரிய ஸ்கோர் அடித்திருக்க வேண்டிய போட்டியில் மிகவும் நார்மலான ஸ்கோரை அடித்து முடித்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.