ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் கேகேஆர் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஆடிவருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக், மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 195 ரன்களை குவித்து, கேகேஆர் அணிக்கு 196 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 54 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்தார். சூர்யகுமார் யாதவ், 28 பந்தில் 47 ரன்கள் அடித்தார். ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு ஆகிய பவர் ஹிட்டர்கள் பதின்களில் தான் ஸ்கோர் செய்தனர். ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவின் அதிரடியான பேட்டிங்கால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 195 ரன்கள் அடித்து கேகேஆருக்கு 196 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. கேகேஆர் அணி அந்த இலக்கை விரட்டிவருகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா 13 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவர் டெத் ஓவரில் தெறிக்கவிடாமல் ஆட்டமிழந்தது கூட பரவாயில்லை. ஆனால் ஆட்டமிழந்த விதம் தான் படுமோசமானது. 

பொதுவாக டெத் ஓவரில் ஃபாஸ்ட் பவுலர்கள் யார்க்கர்கள் வீசுவார்கள் என்பதால், அதை எதிர்கொண்டு பெரிய ஷாட் ஆட ஏதுவாக க்ரீஸில் பின்னால் நின்றுதான் ஆடுவார் ஹர்திக் பாண்டியா. அதேபோலவே, ஆண்ட்ரே ரசல் வீசிய 19வது ஓவரின் 3வது பந்தில், க்ரீஸிலிருந்து நன்றாக பின்னால் வந்து ஆட முயன்றார். ஆனால் ரொம்ப ஓவராக பின்னால் வந்ததால் பந்தை அடிப்பதற்கு முன்பாகவே பேட்டால் ஸ்டம்ப்பை அடித்து ஹிட் விக்கெட் முறையில் அவுட்டாகி சென்றார். அந்த வீடியோ இதோ..