Asianet News TamilAsianet News Tamil

#DCvsSRH ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஃபைனலுக்கு முன்னேறிய டெல்லி கேபிடள்ஸ்..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, ஐபிஎல்லில் முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
 

delhi capitals beat sunrisersy hyderabad and goes to final in first time of ipl history
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Nov 8, 2020, 11:27 PM IST

ஐபிஎல் 13வது சீசனின் 2வது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா ஆடாததால், தவானுடன் ரஹானே தான் தொடக்க வீரராக இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவானுடன் யாருமே எதிர்பார்த்திராத விதமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டார்.

டெல்லி கேபிடள்ஸின் இந்த சோதனை முயற்சி நல்ல பலனை தந்தது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் பவுண்டரிகளை விளாசி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடினார். சந்தீப் ஷர்மா வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த ஸ்டோய்னிஸ், ஹோல்டர் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாச, அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் கிடைத்தது. அதன்பின்னர் தவான் அடித்து ஆட தொடங்கினார்.

ஐந்தாவது ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த தவான், அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் விளாசினார். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் அடித்தது டெல்லி அணி.  முதல் விக்கெட்டுக்கு ஸ்டோய்னிஸும் தவானும் இணைந்து 8.2 ஓவரில் 86 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி தனது பணியை செவ்வனே செய்த ஸ்டோய்னிஸ் 27 பந்தில் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய தவான் அரைசதம் அடித்தார். 

10வது ஓவரிலேயே 100 ரன்களை குவித்துவிட்டது டெல்லி அணி. தவானுடன் இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர், நிதானமாக தொடங்கினார். ஆனால் பெரிய இன்னிங்ஸ் ஆடுவதற்கு முன்பாகவே 20 பந்தில் ஒரேயொரு பவுண்டரியுடன் 21 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தவானும் அடித்து ஆட, மறுமுனையில் ஹெட்மயரும் அடித்து ஆடினார். 50 பந்தில் ஆறு பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸருடன் 78 ரன்கள் அடித்த தவான், 19வது ஓவரின் 3வது பந்திலேயே ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய ஹெட்மயர், 22 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 42 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 189 ரன்களை குவித்த டெல்லி அணி, 190 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்தது.

190 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான வார்னர் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழக்க, ஐந்தாவது ஓவரை வீசிய ஸ்டோய்னிஸ், அந்த ஓவரில் மனீஷ் பாண்டே(21) மற்றும் ப்ரியம் கர்க்(17) ஆகிய இருவரையும் வீழ்த்தினார்.

ஹோல்டர் 11 ரன்களில் அவுட்டாக, அதன்பின்னர் வில்லியம்சனும் இளம் வீரர் அப்துல் சமாத்தும் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். வில்லியம்சன் - சமாத் ஜோடி ஆடியபோது சன்ரைசர்ஸ் அணிக்கு நம்பிக்கை இருந்தது. அதிரடியாக ஆடி 35 பந்தில் அரைசதம் அடித்த வில்லியம்சன், ஸ்டோய்னிஸ் வீசிய 17வது ஓவரில் ஆட்டமிழந்தார். வில்லியம்சன் 45 பந்தில் 67 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, சமாத்தும் 33 ரன்கள் அடித்து 19வது ஓவரில், ஆட்டமிழக்க, 20 ஓவரில் 172 ரன்கள் அடித்த சன்ரைசர்ஸ் அணி 17 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி, ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன் அந்த  அணி இறுதி போட்டிக்கு முன்னேறியதேயில்லை. இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது டெல்லி கேபிடள்ஸ். அந்த போட்டி வரும் 10ம் தேதி நடக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios