Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல்லில் முதல் சதமடித்த தவான்.. கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி டெல்லியை வெற்றி பெற வைத்த அக்ஸர் படேல்

சிஎஸ்கே அணியை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.
 

delhi capitals beat csk by five wickets and again got first place in points table in ipl 2020
Author
Sharjah - United Arab Emirates, First Published Oct 17, 2020, 11:49 PM IST

சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் இடையேயான போட்டி ஷார்ஜாவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக டுப்ளெசிஸ் மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர். முதல் ஓவரிலேயே துஷார் தேஷ்பாண்டேவின் பவுன்ஸரில் டக் அவுட்டாகி வெளியேறினார் சாம் கரன். அதன்பின்னர் டுப்ளெசிஸுடன் வாட்சன் ஜோடி சேர்ந்தார். டுப்ளெசிஸும் வாட்சனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினர். அடுத்த விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதற்காக நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்ததால் 9 ஓவரில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு வெறும் 56 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

அதன்பின்னர் டுப்ளெசிஸ் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாச, வாட்சனும் அஷ்வின் ஓவரில் பவுண்டரிகளை விளாச, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. வாட்சன் 28 பந்தில் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த டுப்ளெசிஸ் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் தோனியும் 3 ரன்களில் ஆட்டமிழக்க, ராயுடுவும் ஜடேஜாவும் இணைந்து சிக்ஸர்களை விளாசி ஸ்கோரை அதிவேகமாக உயர்த்தினர். ராயுடு 25 பந்தில் 45 ரன்களும், கடைசி நேரத்தில் களத்திற்கு வந்த ஜடேஜா 13 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 33 ரன்களை விளாச, சிஎஸ்கே அணி 20 ஓவரில் 179 ரன்கள் அடித்தது. 

180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, ரன்னே அடிக்காமல் முதல் ஓவரிலேயே அவுட்டாக, தவானுடன் ஜோடி சேர்ந்த ரஹானே, 8 ரன்களில் சாம் கரனின் அருமையான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தவானுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடினார்.

தவானும் ஷ்ரேயாஸ் ஐயரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 68 ரன்களை சேர்த்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர்  களத்திற்கு வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ், 14 பந்தில் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி 7 பந்தில் 4 ரன்கள் மட்டுமே அடித்து, 19வது ஓவரின் முதல் பந்தில் அவுட்டானார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடனும் சிறப்பாகவும் ஆடிய தவான், 19வது ஓவரில் சதமடித்தார். இதுதான் ஐபிஎல்லில் தவானின் முதல் சதம். 19வது ஓவரை வீசிய சாம் கரன் அருமையாக வீசி அந்த ஓவரில் ஒரு கேரியை வீழ்த்தியதுடன் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதனால் கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட, கடைசி ஓவரை ஜடேஜாவிடம் கொடுத்தார் தோனி. கடைசி ஓவரை பிராவோவிடம் கொடுக்காமல் ஜடேஜாவிடம் கொடுத்தது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்திருக்கும்.

கடைசி ஓவரின் முதல் பந்தில் தவான் சிங்கிள் அடிக்க, அடுத்து 3 சிக்ஸர்கள் விளாசி, டெல்லி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் அக்ஸர் படேல். இதையடுத்து 14 புள்ளிகளை பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios