ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன்முதலாக போரிட்ட மாவீரன் - பூலித்தேவன்!
பூலித்தேவன் (1715 -1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர்.
இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். பூலித்தேவன்,தன்பகுதியில் நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையார்களுக்கோ, அல்லது ஆதிக்கம் செலுத்தும் மேல் இடத்திற்கோ,மேல்வாரம் தன்மையிலோ,வரி என்ற பெயரிலோ,ஒரு மணி நெல்லைக் கூட யாருக்கும் கண்ணில் காட்டமாட்டாராம், இதன் காரணமாய் ஆவுடையாபுரம் நெற்கட்டுஞ்செவ்வல் என்றாகியது. 1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தான்.
இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தான்.இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றான் என ‘பூலித்தேவன் சிந்து’ என்ற கதைப்பாடல் கூறுகிறது. பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது. 1755ஆம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார்.
அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார். 1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த புலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார்.
அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 அக்டோபர் மாதம் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கிய கேப்டன் பெரிட்சன் பூலித்தேவன் தோற்றான். 1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிப்வால் பூலித்தேவரை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 12 ஆண்டுகள் போரிட்டு அதன் பின் பூலித்தேவர் தோல்வியடைந்தார். அதன் பின் தலைமறைவானார்.
நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார். பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர்.
ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் “பூலிசிவஞானம்” ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.
இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது. பூலித்தேவரின் இறுதிக்காலம் இன்றளவும் விடை தெரியாத புதிராகவே அமைந்துள்ளது.