India@75 : சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தொழிலதிபர்.. யார் இந்த கன்ஷ்யாம் தாஸ் பிர்லா ?
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உதவிய தொழிலதிபர் கன்ஷ்யாம் தாஸ் பிர்லா யார் என்றும், இந்தியாவின் வளர்ச்சியில் அவரின் பங்கு என்ன என்றும் பார்க்கலாம்.
நம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பணக்கார வணிகர்கள் அதாவது தொழிலதிபர்கள் போன்றோர் உதவி செய்துள்ளார்களா என்று நாம் யோசித்திருக்கிறோமா ? இல்லை என்பதுதான் நம் அனைவரின் பதிலாக இருக்கும். அதிகம் பேர் செய்யவில்லை என்றாலும் சில குறிப்பிடத்தக்கவர்கள் செய்துள்ளார்கள். சில தொழிலதிபர்கள் தேசிய இயக்கத்துடனும், மகாத்மா காந்தியுடனும் நெருக்கமாக பணியாற்றினார்கள்.
அவர்களில் கன்ஷ்யாம் தாஸ் பிர்லா மற்றும் ஜம்னாலால் பஜாஜ் ஆகியோர் முக்கியமானவர்கள். தேசிய இயக்கத்தில் பங்கேற்பது, நிதியுதவி மற்றும் நவீன தொழில்களை நிறுவுவதன் மூலம் அவர்கள் தேசியவாதத்திற்கு பக்கபலமாக இருந்தார்கள்.ஏராளமான இந்தியர்களுக்கு வாழ்வாதாரத்தையும் வழங்கினார்கள். கன்ஷ்யாம் தாஸ் பிர்லா குடும்பம் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் உள்ள பிலானி கிராமத்திலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தது.
அவர்கள் பருத்தி, வெள்ளி, தானியங்கள் போன்றவற்றின் வணிகத்தில் நுழைந்தனர், அவர்கள் அப்போது மிகவும் லாபகரமான வணிகமான சீனாவுடன் அபின் வணிகத்தில் சேர்ந்து செல்வத்தைக் குவித்தார்கள். கன்ஷ்யாம் தாஸ் இந்தக் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர் ஆவார். தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்பது அவரது நரம்புகளில் இயங்கிக் கொண்டிருந்ததால், கன்ஷ்யாம் தாஸ் தனது 11 வயதில் பள்ளிக் கல்வியை நிறுத்திவிட்டு தனது தந்தையின் வணிகத்தில் சேர்ந்தார்.
அவர் கொல்கத்தாவுக்குச் சென்று, 1918ல் சணல் ஆலையில் தனது முதல் வணிகத்தைத் தொடங்கினார். தொழிலில் வெளிநாட்டு வணிகர்களின் விரோதப் போக்குகள் கன்ஷ்யாம் தாசுக்கு தேசியவாத உணர்வைத் தூண்டியது என்றே கூற வேண்டும். தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்து தேசிய இயக்கத்தில் சேரவிருந்த மகாத்மா காந்தியை அப்போது சந்தித்தார். இந்த சந்திப்பு தான் காந்திஜிக்கும்,கன்ஷ்யாம் தாசுக்கும் இடையே வாழ்நாள் முழுவதுமான நட்புக்கு அடித்தளமிட்டது. காந்திஜியுடன் சில விஷயங்களில் கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் அவருக்கு மிகப்பெரிய நிதி உதவியாளராக இருந்தார்.
அவர் 1926ல் மத்திய சட்டமன்ற உறுப்பினரானார். 1932ல் காந்திஜியால் நிறுவப்பட்ட ஹரிஜன் சேவக் சமாஜின் தலைவராகவும் இருந்தார். காந்திஜியின் ஹரிஜன் இதழையும் நடத்தினார். தேசியவாத பத்திரிகையான ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிதி நெருக்கடியில் இருந்தபோது கன்ஷ்யாம் தாஸ் அதைக் கைப்பற்றி மீட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1940களில் நாட்டை உலுக்கியது. அதில் கன்ஷ்யாம் தாஸ் அவர்களும் பங்கேற்றார்.
இருப்பினும் கன்ஷ்யாம் தாஸ் பிர்லா தனது துறையில் கவனம் செலுத்தினார். 1942 இல் கல்கத்தாவில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவப்பட்டது. இந்திய நாடு அப்போது அந்நிய ஆட்சியின் கீழ் இருந்தபோதும், இந்திய காரை உருவாக்கினார். இந்துஸ்தான் மோட்டார்ஸ் தயாரித்த அம்பாசிடர் கார் இந்திய அடையாளத்தின் பெருமைக்குரிய அடையாளமாக மாறியது. அடுத்த ஆண்டு கன்ஷ்யாம் தாஸ் பிர்லா ஒரு வங்கியை நிறுவினார். அது யுனைடெட் கமர்ஷியல் வங்கி. இது இப்போது தேசியமயமாக்கப்பட்ட UCO வங்கியாகும்.
சுதந்திரத்திற்குப் பிறகு கன்ஷ்யாம் தாஸ் பிர்லாவின் வணிகமனத்து அபரிவிதமான வளர்ந்தது. லானியில் பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியையும் நிறுவினார். இந்திய நிறுவனங்களின் மிகப்பெரிய அமைப்பான FICCI யின் நிறுவனர் ஆனார். காந்திஜியின் சிறந்த ஆதரவாளரான மகாத்மா தனது கடைசி மூன்று மாதங்களை கன்ஷ்யாம் தாஸ் பிர்லாவின் டெல்லி இல்லத்தில்வாழ்ந்தார். 1000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்ட பன்னாட்டு இவரின் நிறுவனமானது, தற்போது ரூ.3 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது.