பாலிவுட் முன்னாள் பிரபல நடிகை ஜீனத் அமன், கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அமன் கன்னா கைது செய்யப்பட்டுள்ளார்.

1970-களில் பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் ஜீனத் அமன். பிலிம்பேர் விருது, மிஸ் ஆசியா பசிபிக் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ஜீனத் அமன், மும்பை காவல் துறை  துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அமன் கன்னா என்ற தொழிலதிபர் சொத்து விற்பனை ஒப்பந்தம் ஒன்றை முடித்து வைப்பதாக கூறி, தன்னிடம் ரூ.15.40 கோடி மோசடி செய்து விட்டார். 

தொழிலதிபர் தனக்கு பாலியல் தொல்லையும் அளித்து வந்ததாக ஜீனத் அமன் அந்த புகாடிரல் கூறியுள்ளார். அவரின் இந்த புகாரின் அடிப்படையில் அமன் கன்னாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அமன் கன்னா கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மும்பை மாநகர காவல் துணை ஆணையர் நிசார் தம்போலி கூறும்போது, ஜீனத் அமன் கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது என்றார்.

அமன் கன்னா மீது, கடந்த ஜனவரி  மாதம் ஜீனத் அமன் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அந்த புகாரில் கைது செய்யப்பட்ட அமன்கன்னா, பிப்ரவரி மாதம் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இந்த நிலையில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.