பாகிஸ்தானுடனான உறவு சீர்குலைந்ததால், ஆப்கானிஸ்தான் தனது மருந்து தேவைகளுக்கு இந்தியாவை முக்கிய கூட்டாளியாக நாடுகிறது.
ஆப்கானிஸ்தானின் மருந்து தேவைகளுக்கு இந்தியா முக்கிய கூட்டாளியாக உருவெடுத்து வருவதாக அந்நாட்டின் பொது சுகாதார அமைச்சர் நூர் ஜலால் ஜலாலி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் உள்ள உறவுகள் சமீப காலங்களில் மோசமடைந்ததன் காரணமாக, ஆப்கானிஸ்தான் தனது மருந்து விநியோகத்திற்கு புதிய நம்பகமான நாடுகளைத் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நூர் ஜலால் ஜலாலி, இதுவரை ஆப்கானிஸ்தானின் மருந்து சந்தையில் 60 முதல் 70 சதவீதம் வரை பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வந்ததாக குறிப்பிட்டார். ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட தடங்கல்கள் மற்றும் அரசியல் சிக்கல்கள் காரணமாக அந்த சார்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்தியா போன்ற நாடுகளை பார்வையிட்டதாகவும் தெரிவித்தார்.
அரசியல் வேறுபாடுகள் சுகாதார ஒத்துழைப்புக்கு தடையாக இருக்கக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு என ஜலாலி வலியுறுத்தினார். "ஒரு சுகாதார அமைச்சராக எனக்கு ஒரே எதிரி தான் நோய். அதை எதிர்க்க எந்த நாட்டின் உதவி கிடைத்தாலும் நான் அதை நாடுவேன்" என்று அவர் கூறினார். பாகிஸ்தானுடன் உள்ள உறவு தற்போது சீர்குலைந்த நிலையில் இருப்பதாகவும் அவர் வெளிப்படையாக தெரிவித்தார்.
இந்தியாவுடன் புதிய ஒத்துழைப்பு அத்தியாயத்தை தொடங்க ஆப்கானிஸ்தான் ஆர்வமாக இருப்பதாக ஜலாலி கூறினார். நீண்ட காலமாக இந்தியா ஒரு நம்பகமான சுகாதார கூட்டாளியாக இருந்து வருவதாகவும், இந்த உறவை மேலும் விரிவுபடுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். “இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு போன்றது” என அவர் கூறியது கவனம் பெற்றது.
உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது உலக மாநாட்டில் ஜலாலி இந்தியா வந்துள்ளார். அவர் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பொறுப்பு அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் உடன் சந்தித்து, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவங்களில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதித்தார். மேலும், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி நட்டா உடனும் ஜலாலியை சந்தித்து, ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான மற்றும் மருத்துவ உதவிகளை தொடர்ந்து வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் ஒரு பகுதியாக, இந்தியா புற்றுநோய் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் 128-ஸ்லைஸ் CT ஸ்கேனர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை ஆப்கானிஸ்தானுக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜலாலியின் இந்த முதல் இந்திய பயணம், இந்தியா–ஆப்கானிஸ்தான் சுகாதார உறவுகளில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.


