ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை தாக்கிய விமான நிலைய ஊழியர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு போலீஸில் ஒப்படைக்கப்பட்டார். 

இன்று பிற்பகல் தனது பாத யாத்திரையை முடித்துக்கொண்டு விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு திரும்பிக்கொண்டிருந்த ஜெகன் மோகன் ரெட்டியிடம் சீனிவாசன் என்ற விமான நிலைய ஊழியர் ‘செல்ஃபி’ எடுக்க விரும்புவதாக அணுகி, யாரும் எதிர்பாராதவண்ணம் கூர்மையான கத்தியால் அவரது தோல்பட்டையில் கீறினார். உடனே ரத்தக்காயம் ஏற்பட்ட நிலையில் ஜெகன் மோகன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

 

அவரைக்கத்தியால் குத்திய வாலிபரை, ஜெகன்மோகன் ரெட்டியுடன் இருந்தவர்கள் வளைத்துப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த எதிர்பாராத தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. 

சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஒய்.எஸ்.ஆர் கட்சி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா,’ ஒரு நகம்வெட்டி கூட எடுத்து வரமுடியாத விமான நிலையத்துக்குள் எப்படி அந்த வாலிபர் கத்தியோடு வந்தார் என்பது எங்களுக்கு தெரிந்தாகவேண்டும். இதில் கண்டிப்பாக ஏதோ ஒரு சதி இருக்கிறது. ஆளும் தெலுங்கு தேசக் கட்சியின் மெத்தனமான பாதுகாப்பு ஏற்பாடுகளையே இது காட்டுகிறது’ என்று குற்றம் சாட்டுகிறார்.