ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக முடிவு செய்துள்ளது.

தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டபோது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து, தெலுங்கு தேச கட்சி, சிறப்பு அந்தஸ்து கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

ஆனால், மத்திய அரசு, இது குறித்து மௌனமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சியின் அசோக் கஜபதி ராஜூ, ஒய்.எஸ்.சௌத்ரி ஆகியோர் பதவி விலகினர்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால், தெலுங்கு தேசம் கட்சி, மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது. 

குறைந்தது 50 எம்பிக்களின் ஆதரவு இருந்தால்தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 9 எம்பிக்களும் தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களவையில் 16 எம்பிக்களும் உள்ளனர்.

இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. மக்களவை எம்.பி.க்கள் மட்டும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ராஜினாமா அறிவிப்பு செய்துள்ளது.